Friday 19 October 2012

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.

[தினமணி கலாரசிகனில்  "கப்பலோட்டிய தமிழன் ..சிநூலுக்கான  அறிமுகமும் - விமர்சனமும்]

கடந்த  ஓர்  ஆண்டாக  எனது  மேஜையில் நான்  பத்திரப்படுத்தி  வைத்திருக்கும்  புத்தகம்  ஒன்று   உண்டு. மு.கோபி சரபோஜி எழுதிய "கப்பலோட்டிய தமிழன் ..சி.' என்கிற அந்தப் புத்தகத்தை இதுவரை ஆறேழு தடவைகள் படித்தும் விட்டேன். இத்தனை நாள்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதாமல் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு.

"
செக்கிழுத்த செம்மல் ..சி.' 18.11.1936 அன்று இரவு 11.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். நான் இந்தப் பதிவை அதே நாளில் அதே நேரத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். நெஞ்சில் துயரமும் விழியோரத்தில் திரண்டு நிற்கும் கண்ணீர் திவலைகளுமாகத் தமிழகம் தந்த அந்த மாமனிதனின் நினைவால் நெகிழ்ந்துபோய் இதை எழுதுகிறேன். இந்தத் தருணத்துக்காகத்தான் கடந்த ஓர் ஆண்டாக இந்தப் புத்தகத்தை மேஜையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.


..சி.யின் கடைசி நாள்களை கோபி சரபோஜி அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். ""துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்த வாழ்க்கை அவரை நோயாளியாக்கியது. 1935-இல் நோய்வாய்ப்பட்ட நிலையில் ..சி. தூத்துக்குடியில் தங்கியிருந்தார். அப்போது காங்கிரஸின் தலைவராக இருந்த பாபு ராஜேந்திர பிரசாத் தென்னிந்திய சுற்றுப்பயணத்தின்போது தூத்துக்குடி வந்து ..சி.யைச் சந்தித்தார். "சிதம்பரம் பிள்ளை வாழும் தூத்துக்குடிக்கு வரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவர் சிறைவாசத்தை அறிந்து வருந்தியவர்களுள் நானும் ஒருவன். எனது தேசாபிமானம் மேலும் தீவிரமாக அதுவும் ஒரு காரணம்' என்று அவருக்குப் புகழாரம் சூட்டினார்'' என்று பதிவு செய்திருக்கிறார்.

மு. கோபி சரபோஜி ஒரு விஷயத்தையும் விடவில்லை. எந்தவிதத் தாக்கத்தாலும் பீடிக்கப்படாமல், உள்ளது உள்ளபடி ..சி. பற்றிப் பதிவு செய்திருக்கும் அவருக்கு எனது பாராட்டுகள்.

தனது கடைசி மூச்சின் சுவாசத்தில்கூட அவர் தேசத்தையே நினைத்திருந்தார். ஆம்! அவரின் வேண்டுகோளின்படி காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதன் என்பவர் பாரதியாரின் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாடலைப் பாட அதைக் கேட்டபடியே ..சி.யின் கடைசி மூச்சு காற்றில் கலந்தது.

""கைநோவக் கால்நோவக் கல்லுடைத்து செக்கிழுத்து

மெய் சோர்ந்தும் ஊக்கம் விடாது நின்ற - ஐயன்


சிதம்பரம் அன்று சிறை சென்றிலனேல், இன்று


சுதந்திரம் காண்போமா சொல்'' - 
என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடலுடன் புத்தகத்தை முடித்திருக்கும் கோபி சரபோஜியின் புத்தகத்தைப் பள்ளியில் பாடமாக வைக்கவேண்டாம், குறைந்தபட்சம், தமிழுணர்வாளர்கள், தேசியவாதிகள் படிக்கவாவது வேண்டாமா? தங்கள் வீட்டுக் குழந்தைகள் படிக்கவாவது வாங்க வேண்டாமா?

நன்றி : தினமணி