Friday 30 May 2014

மெளன அழுகை - 2

மெளன அழுகை கவிதை தொகுப்பிற்கு கவிஞரும், விமர்சகருமான திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் அளித்துள்ள விமர்சனம்

மு.கோபி சரபோஜி அழகன்குளம்( இராமநாதபுரம் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தவர். கவிதை, நாவல், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், தன்னம்பிக்கை என இதுவரை 21  நூல்கள் வந்துள்ளன. இது இவரது மூன்றாவது கவிதை தொகுப்பு.

இதில் 54 கவிதைகள் உள்ளன. எளிமை, தெளிவு, இழுத்துக்கட்டிய மொழி சார்ந்த வெளிப்பாடு இவரது கவிதை இயல்புகள்.

பரதேசி” – பணம் வேண்டி வாழ்வின் அற்புத தருணங்களை இழக்கும் ஒருவனை இக்கவிதையில் காட்டுகிறார் கோபி.

 ஊரில் உள்ள

கடவுளையெல்லாம் வேண்டி

கண்ணீரோடு அம்மா

புத்தியோடு பிழை

கவனமாய் இரு

வழக்க வாசிப்போடு அப்பா

அடிக்கடி பேசு

யாரிடமும் சண்டைபோடாதே

அக்கறையோடு தங்கை

வார்த்தைகள் தேடும்

மெளனத்தின் பிரிவு துயரோடு மனைவி

எத்தனையாவது

படிக்கும் போது வருவீங்க

ஆவல் கேள்வியோடு மகள்

இத்தனையவும் கடந்து

நகர்ந்து போகின்றேன்

அக்கரை தேசத்திற்கு

பரதேசியாய்!

இக்கவிதையில் சொற்கட்டு அழகாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பத்தியும் முடிந்தபின் மறையாமல் நிற்கும் கனம் மனத்தை வருத்துகிறது. அம்மா, அப்பா, தங்கை, மனைவி, மகள் எல்லோர் மனத்திலும் இவன் ஒருவன் தான் மையப்படுகிறான். ஆனால், இவன் மனத்தின் சுமை? எது அதிக கனமானது? எடை போட முடியாது!

பொய்யாகும் புலம்பல்கள்தன்னம்பிக்கை உணர்வூட்டும் கவிதை. பாறையிடுக்கில் முளைக்கும் சிறு செடியை முன் வைத்து கவிதை நடத்தப்படுகிறது.

எவரும் சாதகமாக இல்லை

எவரும் உதவிக்கரம் நீட்டவில்லை

விதியோ

விடாது சதிராடுகிறது.

என்பது கவிதைத் தொடக்கம். இக்கவிதையில் தகவலே முக்கிய இடம் பிடிக்கிறது.

தாத்தாக்களற்ற வாழ்வு’” என்ற கவிதை நகர்மயமாதலின் இழப்பை பேசுகிறது. ஒரு நேர்கோடு இழுத்தது போல் கவிதை முடிந்து விடுகிறது.

மரத்து பிசின் பசை

நார் இடைவார்

மட்டை செருப்பு

ஓலை தொப்பி

களிமண் பலிங்கி

கொட்டாங்குச்சி வயலின்

கொம்பு ஏற்றம்

சருகு காத்தாடி

கோம்பை வண்டி

மரப்பாச்சி பொம்மை

இலை பீப்பி

இப்படியான எதுவும்

நம் பிள்ளைகளுக்கு

சாத்தியமற்றுப் போனது


தாத்தாக்களற்ற

தனித்த வாழ்வில்!

கிராம வாழ்க்கையின் சாரத்தை நல்ல கலைஞனின் தூரிகைத் தீற்றலாய் காட்டுகிறார் கோபி.

அலமாரி அங்கீகாரங்கள்எழுத்து தொடர்பான கவிதை. வட்டிக்கு கடன் வாங்கி புத்தகம் போடும் எழுத்தாளர்கள் உண்டு. மனைவியின் சங்கிலியை விற்று புத்தகம் பார்த்தவர்களும் உண்டு. இப்படிக் கஷ்டப்படுவது எதற்காக? அலமாரி அங்கீகாரம் வேண்டித் தானே? இதிலும் தகவல் தன்மை முன்னிற்க, கலை கைகட்டி வாய் பொத்தி நிற்கிறது.

அரசியலும், சமூக அவலங்களும் ஒன்றாக இணைந்து கருப்பெருளான கவிதைவல்லரசு கோஷம்”.

ஊழலை ஒழி என்கிறோம்
ஓட்டுரிமையை செலுத்த
பணம் பெறுகின்றோம்.

சாதியை நீக்கு என்கிறோம்
சாதிக்கென தனிஒதுக்கீடு கேட்கின்றோம்.

சட்டத்தை கடுமையாக்கு என்கிறோம்
பாராளுமன்றத்தை தாக்கியவனுக்கு
பாவமன்னிப்பு கோருகின்றோம்

எனத் தொடரும் கவிதையில் ஆயுதபலம், இலவசம் பற்றியும் பேசப்படுகிறது. இவ்விதக் குழப்பங்கள் தீர்க்கப்படாமல் வல்லரசு ஆவோம் என்றால் எப்படி? எனச் சிந்திக்க வைக்கிறார் கோபி.

மெளன அழுகைபெண் மனத்துயரைக் கருப்பொருளாகக் கொண்டது. பாலியல் கவிதையில் கோடிட்டுக் காணப்படும் குறிப்பு சிந்திக்க வைக்கிறது.

விருப்பமறியாமலே

உன் தாக செதில்களை

என் தேக மேடுகளில்

உதிர்த்து எழுந்தாய்…..

களைப்பால் நசிந்த உடலோடுஎன்ற பெண்ணின் தன்னிலை விளக்கம், தாம்பத்தியத்தின் ரசமான பகிர்தலை ஒரு துயர நிகழ்வாய் மாற்றிப் போட்டுள்ளது. ஆண் குற்றவாளியாய் நிற்கிறான்!

உருமாற்றம்கடவுள் வழிபாட்டிற்கு காசு வசூலிப்பதைக் கண்டிக்கிறது. “தவறிப்போன இளமைபணம் தேட வெளிநாடு செல்பவர்களைச் சுட்டுகிறது.

இரகசியம்யதார்த்ததமானது. சுருக்கென்கிறது.

பூங்காக்கள் தோறும்

இறைந்து கிடக்கின்றன

சிலரின் ஏமாறுதல்களும்

பலரின் பரிமாறல்களும்!

இதரக் கவிதை இயல்புகளும் சேர்ந்தால் கோபியின் கவிதைகள் அடுத்த கட்டத்திற்கு நகரும்!