Monday 30 June 2014

மனநிலையை மாற்றிப்போட்ட முதல் அனுபவம்

என்னுடைய நான்கு நூல்கள் வெளிவந்திருந்த நிலையில் புதிய புத்தகத்தின் பதிப்பு விசயமாக கேட்க ஒரு பதிப்பகத்தை தொடர்பு கொண்டேன். அங்கு தொலைபேசியை எடுத்தவர் ஒரு பிரபல எழுத்தாளர். அவருடைய நூல்கள் பல வாசித்தவன். என் எழுத்து ஆவலுக்கு அவருடைய நூல்களும் காரணம். அப்படிப்பட்டவர் எதிர்பாராமல் லைனில் வந்ததும் மனதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. பரஸ்பர முதல் பேச்சுக்கு பின் சம்பந்தப்பட்ட பதிப்பகத்தில் தற்சமயம் புதிய நூல்கள் தயாரிப்புக்கு எடுக்கவில்லை எனவும், வேறு பதிப்பகத்தை அடையாளம் காட்டுவதாகவும் அவரே சொன்னதோடு அவரின் முகவரியை செல் நம்பரோடு கொடுத்து எழுத்துப் பிரதியை அனுப்பி வைக்கச் சொன்னார். நானும் அனுப்பி வைத்தேன். அதன்பின் சில மாதங்கள் கழித்து வெளிநாட்டிலிருந்த நான் ஊருக்கு செல்ல வேண்டியிருந்ததால் சென்னையில் சந்திக்க ஏதுவாக இருக்குமே என்ற நினைப்பிலும், முன்கூட்டியே திட்டமிட வசதியாகவும் அவரைத் தொடர்பு கொண்டேன். எழுத்துப் பிரதியை அனுப்பிய பின் அதுதான் அவரை நான் அழைக்கும் முதல் அழைப்பு.

தொடர்பில் வந்தவரிடம் அறிமுகம் செய்து கொண்டதும் சிறிது நேரம் கழித்து கூப்பிடுங்களேன் என சொல்லிவிட்டு வைத்து விட்டார். அரைமணிநேரம் கழித்து கூப்பிட்டேன். இனி என்னைக் கூப்பிடாதீங்க. எனக்கு வேலை இருக்கு என்றார். அதன்பின் சில நாட்கள் இடைவெளியில் என் பயணம் உறுதியான பின் தொடர்பு கொண்டேன். அவருடைய சில நிமிட உரையாடலுக்குப் பின் மன்னிக்கனும் சார். இனி கூப்பிடமாட்டேன் என சொல்லிவிட்டு நானே தொடர்பை துண்டித்து விட்டேன். இதுவரை அந்த எழுத்துப் பிரதி பற்றி எதுவும் அவரிடம் நான் கேட்கவில்லை. அவரும் அனுப்பித் தரவில்லை, வேறு பதிப்பகம் மூலமாக என் பெயரில் அது நூலாகவும் வந்து விட்டது. அதன் பின்னும் பல நூல்கள் வந்து விட்டன. அவரின் அந்த மறுதலிப்புக்கு என்ன காரணம்? என்று தெரியாமலே போனது. பல நூல்களுக்கு சொந்தக்காரராய், தன்னம்பிக்கை வரிகளை வாசகனுக்குத் தருபவராய் இருக்கும் ஒருவரிடமிருந்து கிடைத்த அந்த முதல் அனுபவம் தான் என் நூல்களுக்கான முன்னுரையோ, மதிப்புரையோ கேட்டு நான் விரும்பிய படைப்பாளிகளை தொடர்பு கொள்ளும் மனநிலையை அடித்துப் போட்டது