Sunday 27 July 2014

தானே விழுந்த விதை

விருந்தாளியாக செல்லும் போதெல்லாம் பார்த்து போயிட்டு வான்னு சொல்வதோடு நிறுத்தாமல் ஏதாவது வாங்கிட்டு போ என சொல்வது என் தந்தையின் வழக்கம். வெறுங்கையோடு போவதும் அங்கே போயிட்டு எதுவும் வாங்கிட்டு வரலையேன்னு சொல்லிட்டு குழந்தைகள் கையில் காசு கொடுத்துட்டு வருவதும் அவருக்கு பிடிக்காத ஒரு விசயம். ஆனால் பல நேரங்களில் அவரின் அறிவுறுத்தலை நான் பின்பற்றியதில்லை. எதுக்கு இங்கே வாங்கி தூக்கிட்டு போகணும். அங்கேயே போய் ஏதாவது வாங்கிக்கலாம் என்ற நினைப்பு பல நேரங்களில் அதற்கு காரணமாகிவிடும்

இரு குழந்தைகளுக்கு தந்தையான பின்னும் இந்த பழக்கத்தை கையகப்படுத்த முடியாத நிலையில் ஒருநாள் குடும்பத்தோடு என் மனைவியின் தங்கை வீட்டில் இந்த வருட புது வரவாய், உறவாய் பிறந்திருந்த குட்டிச்செல்லங்களை பார்க்க கிளம்பினேன். அப்போது என் மகள், ”டாடி………தங்கச்சி பாப்பாவுக்கு நாங்க இன்னும் ஒன்னுமே வாங்கித் தரல. அதுனால ஒரு டிரஸ் வாங்கிட்டு போவோம்னுசொன்னாள். அதான் நானும், அம்மாவும் டிரஸ் வாங்கிட்டோமேனு நான் சொன்னேன். அதற்கு அவள்இது நீங்க வாங்கிக் கொடுக்குறது. நாங்க வாங்கி கொடுக்க வேணாமா? தங்கச்சி பாப்பாவை வெறும் கையோடு போயா பார்ப்பாங்க? என்று கேட்டாள்.

 

அந்த கேள்விக்காகவே முக்கால் மணிநேரம் காத்திருந்து ஜவுளிக்கடை திறந்ததும் டிரஸ் எடுக்க கடைக்குள் அழைத்துப் போனேன். அங்கிருந்த பணியாளர் எவ்வளவு ரூபாய்குள்ள டிரஸ் பார்க்கனும்? என்று கேட்டார். உடனே திரும்பி என்னை பார்த்த மகளிடம் உனக்கு பிடிச்சதை எடு. டிரஸ் விலையை விட சும்மா போகக் கூடாதுன்னு நீ நினைத்தது தான் முக்கியம் என்றேன். அதன் அர்த்தம் அவளுக்கு எந்த அளவுக்கு புரிந்திருக்கும் என தெரியாத போதும் விதைக்க தவறி தானே விழுந்து முளைக்க ஆரம்பித்திருக்கிற அந்த பழக்கத்தை அவளின் வாழ்நாள் முழுமைக்குமான பழக்கமாக்கி விட வேண்டும் என நினைத்துக் கொண்டேன்