Thursday 9 October 2014

கேட்டதும் - பெற்றதும்

மனைவி என்கின்ற ஒற்றை உறவில் என்னோடு பயணிக்கத் தொடங்கி சிநேகிதியாய், என் தவறுகளை பொறுத்துக் கொண்டு நெறிப்படுத்துபவளாய், சண்டைக்காரியாய், தளர்ந்த சமயங்களில் தோள் கொடுத்து உற்சாகப்படுத்தும் நம்பிக்கை கரங்களாய் பயணிப்பவளிடம் காலையில் பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லிய பின் மகனை அழைத்து அம்மாவுக்கு பிறந்தநாள் பரிசாக என்ன கொடுத்தாய்? என்றேன்.

ஒன்னும் கொடுக்கல. வாழ்த்து மட்டும் தான் சொன்னேன்என்றான்.

 வெறும் வாழ்த்துச் சொன்னா நல்லாவா இருக்கு? என்றதும் சட்டென நீங்கள் மட்டும் என்ன கொடுத்தீங்க? வாழ்த்து மட்டும் தானே சொன்னீங்க என்றான்.

கண்ணாடி வீட்டுல ஒக்காந்துகிட்டு கல்லை எறிஞ்சிட்டோமேன்னு தோண சமாளித்துக் கொண்டு நான் வெளியில இருக்கேன். அதுனால கொடுக்க முடியல என்றேன்.

 வெளியில் இருந்தா கொடுக்க முடியாதா? என் பிறந்தநாளைக்கு ஒரு கவிதை எழுதி இருந்தீங்களே அதுமாதிரி அம்மாவுக்கும் ஏதாவது எழுதி கொடுக்கலாம்ல என்று கூறினான்.

என்ன சொல்லி சமாளிப்பது? அம்மாவின் அடுத்த பிறந்தநாளுக்கு அப்படி ஏதாவது செய்கிறேன் என அவனிடம் உறுதி சொன்னேன்.

பெரியவர்களாகிய நாம் காரணங்கள் வழி தப்பிக்க பார்க்கிறோம். குழந்தைகளோ தவறைக்கூட காரணங்கள் வழி சரிக்கட்டுவதை விரும்புவதில்லை.