Tuesday 23 December 2014

”அலமாரி” – யில் வந்த விமர்சனம்

நாவல்என ஆசிரியர் குறிப்பிட்டிருந்தாலும் இதில் நாவலுக்கான இழை பூரணி, அருண், குமிகோ, லெனின், வாங்லி, யாசியன், திசைகள் மாறி வந்து ஒரு சேர கப்பலில் பயணிக்கும் நண்பர்கள் என கதாபாத்திரங்களால் வாழ்வியலுக்கான விசயங்களை தலையில் குட்டு வைப்பது போல சொல்லியும், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படியும், சுவராசியமாய் ஒரு மெல்லிய சரடாக மட்டுமே நகர்ந்து செல்கிறது. மற்றபடி நூல் ஒரு கப்பல் பயணத்தை மட்டுமே முழுமையாக தருகிறது.

சிங்கப்பூர்மலேசியாதாய்லாந்து  என மூன்று நாடுகள் ஐந்து நாட்கள் என சுற்றி வந்த இந்த கப்பல் பயணத்தை நூலாசிரியரே மேற்கொண்டு அனுபவித்து அதன் ஈரம் காயாமல் கொடுத்திருப்பதால் நேரடியாக நாமே பயணம் செய்த அனுபவத்தை உணர முடிகிறது. உணர்ந்தால் மட்டும் போதாது அனுபவிக்க வேண்டும் என்றால் பயணம் செய்து தான் ஆக வேண்டும். செலவு என்று பார்த்தால் கணவன், மனைவி, குழந்தை என மூவர் அடங்கிய குடும்பத்திற்கு 1,75,000 ரூபாயாம்! கப்பலில் தரப்படும் அறை உள்ளிட்ட சில வசதிகள் தவிர மற்ற வசதிகளுக்கு நாம் செய்யும் செலவு தனியாம்!! கப்பலில் ஏறும் போதே அடையாள அட்டையோடு (SEE PASS) கடன் அட்டையையும் (CREDIT CARD) இணைத்து விடுவார்களாம்!

பயணத்தை தொடங்குவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும், அன்னியநாட்டில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டு (VISA) நடைமுறைகள், அந்தந்த நாடுகளின் துறைமுகத்திற்கு கப்பல் சென்ற பின் வெளியேறி சுற்றிப்பார்ப்பதற்கான நடைமுறைகள், அங்கு வாங்கக் கூடிய பொருட்கள் போன்ற தகவல்களை சொல்லி வரும் நூலாசிரியர் கட்டம் கட்டப்பட்ட அடையாளங்களுக்குள் பயணக்காப்புறுதி உள்ளிட்ட பயணங்களின் போது மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

சரளமான தமிழ் நடையில் நூலாசிரியரின் எழுத்திலேயே சொல்ல வேண்டுமானால்குழிகள் இலாத விரைவுச்சாலையில் வழுக்கிக் கொண்டு சென்ற கார் பயணம் போலவாசித்தலின் வழி ஒரு முழு கப்பல் பயணத்தை அதன் பிரமாண்டத்தோடும், அழகியலோடும் என்னை அனுபவிக்க வைத்தது இந்நூல்.நீங்களும் வாசியுங்கள். நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள்

நன்றி ; அலமாரி மாத இதழ்