Monday 26 January 2015

ஓலைக்கிளி

நகரத்தில் வசிக்கும் மருத்துவரை சவட்டி என்ற பட்டப்பெயரில் அழைக்கப்படும் பரமன் பலவருடம் கழித்து வயது வந்த பெண்ணோடு சந்திக்க வருகிறான். தன் மகள் என அறிமுகப்படுத்தும் அவளைப் படிக்க வைப்பதற்காக பண உதவி கேட்டு இரண்டாயிரம் ரூபாய் வாங்கிச் செல்கிறான். அவரிடம் வாங்கியதைப் போலவே தெரிந்தவர்களிடம் எல்லாம் ஆளுக்கு இரண்டாயிரம் என வசூலிக்கும் சவட்டி அந்தப் பணத்தின் மூலம் ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிக்கிறான். எளிதில் நம்மால் யூகிக்க முடியாத அதை சவட்டியின் குணங்களோடும், வாழ்வியல் முறைகளோடும் சொல்கிறதுஓலைக்கிளிகதை. இக்கதை எஸ்.ராமகிருஷ்ணனின்மழைமான்தொகுப்பில் உள்ளது.

எம்மான் என் பேரை எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க. அந்தப்பேரு எனக்கே மறந்து போச்சுஎன்ற வரியின் வழி இட்டபெயர்களை பட்டப்பெயர்கள் மறக்கடித்து விடும் அவலத்தோடு மருத்துவரும், சவட்டியும் சந்திக்கும் கால இடைவெளியையும் -

அந்த ஆளையும், அந்தப் பொண்ணையும் பார்த்தா ஒட்டவேயில்லைஎன்றும்சவட்டி ஏமாற்றப் போவதை முன்னரே உணர்ந்ததைப் போலஉங்களை நல்லா ஏமாத்திக் காசு வாங்கிட்டுப் போயிட்டாங்கஎன்றும் மருத்துவரான தன் கணவரிடம் அவரின் மனைவி சொல்வதிலிருந்து பெண்களின் முன் உனர் தன்மையையும்

உங்கள் அத்தனை பேரையும் தேடி வந்து ஏமாற்றியதன் வழியாக என்னைப்பற்றிய நினைவை உங்களிடம் புதுப்பித்துக் கொண்டேன்என்று கடிதத்தில் எழுதும் சவட்டியின் வரிகளின் மூலம் ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவர்களிடம் பதியம் போட்டுச் செல்ல விரும்பும் மனித இயல்பையும்  கோடி காட்டியபடியே கதை நமக்குள் பதியம் போடத் துவங்குகிறது.

ஏமாற்றி பணம் வசூலித்தது எதற்கு? என்று கடிதம் எழுதிய சவட்டி அதனோடு வைத்து அனுப்பிய ஓலைக்கிளியைப் பார்த்து சந்தோசப்படும் மனைவியிடம் அதைத் தன் நண்பர் அனுப்பி வைத்திருப்பதாய் பொய் சொல்லும் மருத்துவர் சவட்டியின் பெயரையும், அவன் எழுதிய கடிதத்தையும் மறைத்து விடுகிறார்.

தான் ரவுடியாக இருந்த காலத்தில் ஒருநாள் உதவிய பூக்காரக் குடும்பத்தில் இருக்கும் பெண்ணின் திருமணச் செலவுக்கு பணம் வசூலித்துக் கொடுத்து விசுவாசத்தையும்

மருத்துவரின் மனைவி கையால் காபி குடித்தததற்காக  ஓலைக்கிளி ஒன்றை அனுப்பி வைத்து நன்றிக் கடனையும் - செலுத்திய சவட்டியின் மேல் தன் மனைவிக்கு இருக்கும் தவறான அபிப்ராயத்தை மருத்துவர் அப்படியே நீட்டிக்கச் செய்தது ஏன்? என்ற கேள்விக்கான விடை கதையில் தொக்கி நிற்கிறது. ஒருவேளை வாசிக்கும் வாசகர்களிடமே அதற்கான விடையை ஆசிரியர் கொடுத்து விட்டார் என்றும் கொள்ளலாம்.

குணங்களை மட்டுமே மையமாக வைத்து கதை சொன்ன விதம் புதியதொரு வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

ஆசிரியர்  : எஸ். ராமகிருஷ்ணன்

       கதை    : ஓலைக்கிளி

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்