Saturday 15 August 2015

கனியான பின்னும் நுனியில் பூ

வண்ணதாசனின்கனியான பின்னும் நுனியில் பூஎன்ற இந்தக் கதையில் தினகரி, அவளின் அப்பா, ஒரு குட்டிப் பெண், அவளின் அப்பா என நான்கே கதை மாந்தர்கள் தான். தினகரியின் அப்பாவாக வரும் கதையாசிரியரே நேரலையில் நமக்குக் கதை சொல்கிறார்.

தினகரியையும், அவளின் தந்தையையும் சார்ந்த காட்சிப் படுத்தலாகவே சட்டென்ற திருப்பங்கள் ஏதுமில்லாமல் நகரும் கதையில் சரி பாதியைத் தாண்டிய பிறகே மற்ற இரு கதைமாந்தர்களும் உள்ளே வருகின்றனர்தான் பழம் வாங்க வந்த கடையில் ஒரு குட்டிப்பெண்ணையும், தாடிக்காரரான அவளின் அப்பாவையும் சந்திக்கும் தினகரியின் அப்பா இயல்பாக அவருடன் உரையாடிக்  கொண்டிருக்கிறார். அதைக் கண்ட தினகரி அவரைத் தனியே அழைத்துஅந்த ஆள் தன் கல்லூரியில் படிக்கும் பெண்ணிடம் கழுத்துச் சங்கிலியை கட் பண்ணப் பார்த்து பிடிபட்டவன்என்று சொல்லும் இடத்தில் ஒரு திருப்பம் நிகழ்கிறது. அதை நிகழ்த்திய அந்த மனிதரைச் சூழ்ந்து தான் இனி கதை நகரும் என்ற வாசிப்பாளனின் நினைப்பை பொய்யாக்கும் விதமாக தாடிக்காரரின் மகளான அந்தக் குட்டிப் பெண்ணின் வழியாக மீதிக் கதையை ஆசிரியர் ஆரம்பித்துச்  செல்வது சுவராசியமான திருப்பம். ”திருப்பங்களை உருவாக்குபவனே சிறந்த சிறுகதையாளன்என்ற ஜெயமோகனின் வரி இங்கு நினைவுக்கு வந்து போவது தவிர்க்க முடியாததாகிறது. அவன் ஒரு திருடன் என்று சொல்லிய மகளிடம்இருக்கட்டும்மாஎன்று சொல்லும் தனித்த மனநிலை வண்ணதாசனின் கதை மாந்தர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

கதையின் முடிவில் தன் மகள் தினகரியிடம் அவள் வழிப்பறித் திருடனாகப் பார்த்த தாடிக்காரரைப் பற்றிச் சொல்லும் போதுஅவரு கொய்யாப் பழம் வாங்க வந்திருக்காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கோம். அவ்வளவு தாம்மாஎன்றதும் அவரைப் பற்றி அவள் வேறு ஏதும் சொல்வதற்கு இல்லாதவளாய்  ”அவ்வளவுதான்ப்பாஎனச் சொல்லி விட்டு அவரின் மகளான அந்தக் குட்டிப் பெண்ணிடம் செல்லும் போது நமக்கும் அவரைப் பற்றி நினைக்க ஏதுமில்லாமல் போகிறது.

நாம் அறிந்த வார்த்தைகளின் வழி தான் காணும் புறக்காட்சிகளை நம் கண்முன் ஓவியக் காட்சிகளாய் வரைந்து காட்டுவதும், சுற்றுப்புறத்தின் நிகழ்வுகளை இயல்பான மொழி நடையில் கதைக்குள் விரவி விடுவதும், அன்பை அள்ளித் திரியும் கதைமாந்தர்களோடு வாசிப்பாளனை புழங்க விடுவதும் வண்ணதாசனின்  தனித்தன்மை, அந்தத் தனித்தன்மை இந்தக் கதையில் இன்னும் அதிகமாகவே இருக்கிறது எனலாம்.

தலைப்பில் கல்யாண்ஜியாய் மிளிர்ந்து கதையில் வண்ணதாசனாய் விரிந்து செல்லும் கதை அவரிடமிருந்து நழுவி நமக்குள் ஒரு மாதுளம் பழமாய் உருண்டோடுகிறது.