Monday 12 October 2015

களமாடும் சாளரமான தங்கமீன்!

ஐம்பதாவது நிகழ்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தங்கமீன் வாசகர் வட்டத்தின் நாற்பத்தி இரண்டாவது கூட்டம் நேற்று (11-10-2015) தோபயோ பொது நூலக அரங்கில் நடைபெற்றது

பார்வையானாக மட்டும் இருந்தால் கொஞ்சம் லேட்டாகப் போகலாம். நேற்றைய நிகழ்வில் பங்கேற்பாளனாகவும் இருந்ததால் பத்து நிமிடங்களுக்கு முன்பே அங்கு இருக்கும் படி பார்த்துக் கொண்டேன். “சரியான நேரத்திற்கு வந்துட்டீங்கபோலஎன நண்பர் யாழிசை கேட்ட பின்பு தான். எப்படியெல்லாம் நம்மளைக் கவனிக்கிறாங்க? என்பது தெரிந்தது. புதிய நிகழ்வுகளை முயற்சித்துப் பார்ப்பதில் தயங்காத தங்கமீன் நேற்றும் புதிய சாளரம் ஒன்றைத் திறந்து விட்டது. தங்கமீன் பதிப்பிக்காத ஒரு நூலுக்கான அறிமுகத்திற்குத் தன் மாதாந்திர நிகழ்வை வழங்கிச் சிறப்பித்தது. சிங்கப்பூர் இலக்கியக் களங்களில் தொடர்ந்து களமாடவும், கவனம் பெறவும் இப்படியான தேவை அவசியம் என நினைக்கிறேன். தொடர வேண்டும்.

பொதுவாகத் தொகுப்பாளர்கள் சின்னச் சின்னக் காகிதக் குறிப்புகளை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை வழி நடத்துவது வழக்கம். சமீபமாய் ஐபோன், ஐபேடு போன்ற கணினிச் சாதனங்கள் அந்த இடத்தைப் பிடித்திருந்த நிலையில் நிகழ்வை வழி நடத்திய தோழி பானுசுரேஷ் அவர்களின் கையில் குறிப்புகளாய் ஒரு நாற்பது பக்க நோட்டு இருந்தது. கடைசி நிமிடம் வரைக்கும் கொஞ்சம் குறிப்பெடுக்கனும் எனச் சொல்லிக் கொண்டிருந்தவரின் மெனக்கெடல்கள் அவரின் நெறியாள்கையைச் சிறப்பாக்கியது.

எனக்கு மிகவும் விருப்பமான அங்கங்களில் ஒன்றான  ”நாடக பாணி கதை சொல்லல்இம்முறை ஆண்களின் ராஜ்ஜியமாக இருந்தது. பெண்வாசகிகள் பொங்கியிருக்க வேண்டாமா? கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்கள்! அதனால் தானோ என்னவோ ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் வகையிலான கதையைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் என நினைக்கிறேன். தொடர் கதை சொல்லலில் வாசகனின் கவனத்தை ஒரு முகப்படுத்தத் தொழில் நுட்பம், தகவல் அறிவியல் சாராத கதைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என நினைக்கிறேன்ஒரு பேய் கதை தக்க வைத்த இடத்தை தகவல் அறிவியல் கதை தக்க வைக்கத் திணறியது தெரிந்தது.

மாதாந்திரக் கருப் பொருளுக்கேற்ப இடம்பெறும் குறும்படத் திரையிடலில்விசிலடிச்சான் குஞ்சுரசிகனாக மட்டுமே இருக்கும் எனக்கு அதிக வேலை இருக்காது. வாசகர்களின் கருத்துகள் வழி குறும்படத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்களையும்,. அதை அணுகும் விதம் பற்றித் தெரிந்து கொள்ளவும். இந்த அங்கத்தை நான் பயன் படுத்திக் கொள்வதுண்டு,

கவிதையும், கானமும்என்ற புதிய அங்கத்தில் கானத்தை மட்டுமே மையமாகக் கொண்டு அதன் வரிகளை ஒட்டியும், வெட்டியும் கவிதைகளை எழுதாமல் அதன் கருவை மையமாகக் கொண்டு கவிதை வாசித்தால் கானம் கேட்ட மாதிரியும் இருக்கும். கவிதை கிடைத்த மாதிரியும் இருக்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் தரும் இப்பகுதியை இரு வழிச்சாலையாக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம். லேட் பிக்கப்பில் வந்த எண்ணம் என்பதால் நிகழ்வில் பகிர முடியவில்லை,

நிகழ்வின் முக்கிய அங்கமான நண்பர் கவிஞர் யாழிசை மணிவண்ணனின்தேவதைகள் தூவும் மழைக்கான அறிமுகத்தில் நானும் மற்ற இரு நண்பர்களும் விமர்சனம் செய்தோம். யாழியின் படைப்போடும் அவரையும் இழைத்தும், இணைத்தும் நிறையப் பதிவுகளை அகமும், புறமுமாய் அடையாளப்படுத்தித் தன் விமர்சனத்தை கணேஷ் நாராயணன் ஆரம்பித்து வைத்தார். நான் அந்தத் தொகுப்பில் அகம் சாராத பதிவுகளின் வழி என் கருத்துகளை விமர்சனமாக முன் வைத்தேன். நன்றாக பேசியதாய் நண்பர்கள் சொன்னார்கள். நம்பத்தான் வேண்டி இருந்தது. நீங்களும் நம்புங்கள்கடைசிப் பேச்சாளர்களுக்கு எழும் சிக்கல் மூன்றாவதாய் விமர்சிக்க வந்த தோழி சுபா செந்தில்குமாரையும் விடவில்லை. அவர் தன்னுடைய விமர்சனத்திற்காகத் தேர்வு செய்து வந்திருந்த பதிவுகளில் பலவற்றை அவருக்கு முன் பேசிய நாங்கள் கோடிங் செய்து விட்டதை ஆதங்கமாய் அரங்கிலேயே சொல்லி வைத்தார்.

எந்த ஒரு நிகழ்வுக்குச் செல்லும் போதும் அதன் வழி நான் பெறப்போகும் செய்தி என்னவாக இருக்கும்? என்று பார்ப்பதுண்டு. அப்படி தங்கமீனில் மாதந்தோறும் எனக்குக் கிடைக்கும் செய்தியாய் நான் நினைப்பது கதை, கவிதைகள் சார்ந்து தரப்படும் சிறப்பான, தெளிவான விமர்சனங்கள்! ஒரு படைப்பாளி தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ள இவை அவசியம் என்பதாலயே தங்கமீனின் இருக்கைகள் மாதந்தோறும் நிரம்பியே இருக்கின்றன. என் கதைக்குத் தரப்பட்ட விமர்சனத்தைக் கேட்டதும் நான் எழுதும் கதைகளைத் தொடர்ச்சியாக வாசித்து வரும் நணபர், ”கதை முடிவுகள் குறித்த உன் தேர்ச்சி இன்னும் மூணாங்கிளாஸ் லெவலில் தான் இருக்கு. அதை மேம்படுத்திக்கப் பாருஎன்று சொன்னது மீண்டும் நினைவில் வந்து போனது,. தொடர் வாசிப்பின் மூலம் பத்தாங்கிளாசில் பெயிலாகிற லெவலுக்கு வராவிட்டாலும் மூணாங்கிளாசை பாஸ் பண்ணவாது பார்க்க வேண்டும். "முயற்சி திருவினையாக்கும்" என்பதில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது..

 ஒருவர் மீது இன்னொருவர் கொள்ளும் அக்கறைகள் வழி நாம் இயங்கும் போது வெளிப்படும் மாற்றங்களை வரிசைப்படுத்திய தங்கமீன் வாசகர் வட்ட அமைப்பாளர் பாலு மணிமாறன் அவர்கள் புதிய தலைவரையும், ஒருங்கிணைப்பாளர்களையும் அறிவித்தார். தலைமை மாற்றம் திராவிடக் கட்சிகளுக்குள் நடக்கும் உள்ளடி வேலைகள் ஏதும் இல்லாமல் காமராஜர் ஆட்சி போல வெளிப்படையாக நடந்தேறியது சிறப்பு!

பத்தரை மணிக்கு வந்த பேருந்தில் ஏறியதும் தமிழக டாஸ்மார்க்கின் இணைப்பான பாருக்குள் நுழைந்த பிரமை! குடிக்கக் குடிபெயர்ந்தவர்களின் கூடாரத்திற்குள் நாற்பது நிமிடம் நிதானமாய் பயணித்தது சில அனுபவங்களைத் தந்து போனது. அறைக்குச் செல்லும் நடை பாதை எங்கும் இந்தியக் குடிமகன்கள் வார இறுதி நாளைக் கிங்பிஷ்ஷருடன் செலவிட்டுக் கொண்டிருந்தனர். இதை எல்லாம் பார்க்கும் போது விஜய் மல்லையா கடனாளி என்று சொல்வதெல்லாம் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல  கடைக்கோடி இந்தியனுக்கும் திருப்பதி மொட்டையப் போட்டு கூடவே பட்டையவும் போடும் அவரின் தந்திர நாடகமாகவே தெரிந்தது. ஒரு இந்தியக்குடிமகனாய் இப்படி எழுத மட்டும் தான் முடிகிறது!

பட உதவி : தங்கமீன் வாசகர் வட்ட,ம்