Sunday 13 December 2015

குழந்தைகளின் மீதான வன்முறை!

மகனும், மகளும் ஒரே பள்ளியில் பயில்கிறார்கள். மகளுக்குச் சொல்லிக் கொடுத்த, கொடுக்கின்ற ஆசிரியர்களே மகனுக்கும் பாட ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இதனால் மகளின் செயல்பாடுகளோடு மகனின் செயல்பாட்டை ஒப்பீடு செய்து பார்ப்பது அவர்களுக்கு எளிதான விசயமாக அமைந்து விடுகிறது. ஆசிரியர் - பெற்றோர் சந்திப்பிற்குப் பள்ளிக்குச் சென்று திரும்பும் போதெல்லாம் மனைவியின் பேச்சில் இதன் தாக்கம் தெரியும்.

உன்னை மாதிரி உன் தம்பி இல்லைஎன மிஸ் சொன்னதாய் மகள் சொல்லும் போதெல்லாம், ”ஏன் உன்னையைப் போல இருக்க வேண்டும்? அப்படி அவன் இருப்பதில் எனக்கு இஷ்டமில்லைஎனச் சொல்லி விட்டு மகனிடம்உனக்கு என்ன முடியுமோ? அதை மட்டும் செய். ஆனால் சரியாகச் செய். அது போதும்என்பேன். இப்படியான ஒப்பீடுகள் அவனை அறியாமலே அவனுக்குள் ஒருவித தாழ்வுணர்ச்சியைக் கொடுத்து விடுமோ? என்ற அச்சத்தில் அதற்கான வழிகளை ஒவ்வொருமுறையும் அடைத்துக் கொண்டே வரும் போதெல்லாம் ஏதோ ஒரு ரூபத்தில் அது புதிதாய் முளைத்து விடுகிறது

பெற்றோராலும்,ஆசிரியர்களாலும் செய்யப்படும் இப்படியான ஒப்பீடுகளுக்கும், ஆயுதமற்ற வன்முறையைக்குழந்தைகளின்மீது பிரயோகிப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை! குழந்தைகள் மிகச் சரியாகப் பயணிக்க ஒப்பீடுகளின் வழியேயான வழிகாட்டலை விட அவர்களின் சுயத்தின் மீதான வழிகாட்டல்களே தேவை என்பதை பள்ளிகளில் ஆசிரியர்களும், வீடுகளில் பெற்றோரும் எப்பொழுது உணரப்போகிறார்களோ?