Monday 4 January 2016

பைத்தியம் என்றானவர்

திருப்பங்கள் நிறைந்த வாழ்வில் எல்லா நிகழ்வுகளும் இனிமையானதாக அமைந்து விடுவதில்லை. சில வாழ்க்கையைத் தலைப்பிரட்டையாகப் புரட்டிப் போட்டு விடுவதும் உண்டு. கால்களை நனைக்க விரும்பும் கடல் கொஞ்சம் மிரண்டு வந்தால் விலகி ஓடுவோமே அதுபோல வாழ்க்கையில் நம்மைக் கடந்தும், கடத்தியும் போகும் நிகழ்வுகள் கொஞ்சம் மிரட்சியாக அமையும் போது வாழ்வின் மீதான கேள்விக்குறிகளின் முனைகள் இன்னும் நீண்டு விடுகிறது. அப்படித் தன் முனைகளின் நீளத்தை எனக்குள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வை என்னுள் அந்த இரவுப்பொழுது நிகழ்த்திக் காட்டியது.

சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த சமயத்தில் ஒருநாள் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு இடைநிறுத்தப் பேருந்திற்காக  பேருந்து நிலையத்தின் இருக்கையில் மனைவியோடு காத்திருந்தேன். இரவு மணி பதினொன்றைத் தாண்டியிருந்ததால் சாலையில் வாகனங்கள் குறைவாகவே இருந்தன. பேருந்திற்காக சிலர் காத்திருந்தனர். ஓரிரண்டு இரவு நேரக் கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் சாத்தபட்டிருந்தது நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர் எதிரே சாலையின் மறுபக்கத்தில் இருந்த மின் கம்பத்தில் பெரிய சோடிய விளக்குகள் திசைக்கொன்றாய் வெளிச்சத்தை இறைத்துக் கொண்டிருந்தன.

வெட்டப்படாத தலைமுடி, முகத்தை மூடிய நிலையில் அடர்ந்த தாடி, பட்டன்கள் இல்லாத அழுக்குச் சட்டை, மடக்கிக் கட்டிய கைலி என அந்த மின்கம்பத்தின் கீழ் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்தத் தோற்றம் மனநிலை பிறழ்ந்தவராக அவரைக் காட்டியது. மேல்நோக்கிப் பார்த்து எதையோ சொல்லிக் கொண்டிருப்பது உதட்டசைவில் தெரிந்தது.

நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்த என் மனைவி, ”வச்ச கண்ணு எடுக்காம அங்கே என்னத்தைப் பார்த்துக்கிட்டு இருக்க?” என்றாள்.

அந்த மின்கம்பத்துக்கு கீழே நிற்கிறவரை பாரேன் என்றதும் என்ன ஜோக் அடிக்கிறதா நினைப்பா? ”அபியும் நானும்படத்தை நானும் பார்த்திருக்கிறேன். பஸ்ஸ்டாண்டுன்னு கூட பார்க்கமாட்டேன் பார்த்து நடந்துக்க.

அது இல்லடி. அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்றதும் தன் மேலுதட்டைப் பிதுக்கியவள், “ஆமா…..…பைத்தியக்காரனுல இருந்து ஊருல இருக்கிற பயலுக எல்லாத்தையும் உனக்குத் தெரியுது. ஆனா அவனுகளுக்குத் தான் உன்னையத் தெரிய மாட்டேங்குதுஎன்று சீண்டலாய் சீறினாள்.

இல்லடி….சீரியசா சொல்றேன். அந்த ஆள் எனக்கு நெருக்கமானவராத் தோணுது. பக்கத்துல போய் பாத்துட்டு வரலாமா? என்றேன்.

நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையாக்கும். பைத்தியக்காரன் பக்கத்துல போய் அவன் என் சேலை சட்டையக் கிழிச்சி விடுறதுக்கா? நீ வேணா போய் பார்த்துட்டு அவனோடவே இருந்துட்டு வா. பஸ் வந்ததும் நான் கிளம்பறேன் என்றாள்.

அவளை அழைத்துக் கொண்டோ அல்லது தனியே விட்டுட்டு நான் மட்டும் போய் பார்ப்பதோ அந்த நேரத்தில் சரியில்லை எனத் தோன்றியதாலும், பக்கத்தில் பேருந்திற்காகக் காத்திருப்பவர்கள் எங்கள் உரையாடலைக் கவனிப்பது போலிருந்ததாலும் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை.

மின்கம்பத்திற்கு அருகில் நின்றவர் நகர்ந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பில் வந்து சாய்ந்து நின்றார். அப்பொழுதும் அவரின் வாய் எதையோ உச்சரித்துக் கொண்டே இருப்பது தெரிந்தது. முன்பை விட அருகில் இருந்தாலும் முகத்தை வலமும், இடமுமாக ஆட்டிக் கொண்டே இருந்ததால் அவரைச் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. சில நிமிடம் மட்டும் அங்கே நின்று விட்டு மீண்டும் மின்கம்பத்திற்கு அருகில் சென்று விட்டார்.

போதும். பைத்தியக்காரன் மேல இருக்கிற மானசீகம்”. பஸ் வந்துடுச்சு என்ற படி என் கையை இறுக்கிப் பிடித்தாள் மனைவி

பேருந்தில் ஏறி அமர்ந்த பின்னும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனையோ மனநிலை பிறழ்ந்தவர்களைப் பார்த்தும், கடந்தும் சென்றிருக்கிறேன். ஆனால் இந்த முகம் அப்படி என்னை எளிதாகக் கடந்து போக விடாமல் மனதைப் பிசைந்து கொண்டே இருந்தது.

வீட்டிற்கு வந்த பின்னும் மனச் சஞ்சலம் ஓயவில்லை.. விடிவதற்கு இன்னும் சில மணிநேரங்கள் இருந்தாலும் கண்கள் ஓய்வுக்குத் தயாராக மறுத்தது. படுக்கையில் உடல் மட்டுமே கிடந்தது. மனமோ அந்த முகத்தை அடையாளம் காண்பதில் தீவிரமாய் இருந்தது. விடிந்ததும் அவரைப் போய் பார்த்து யாரென்று தெளிவு படுத்திக் கொண்டால் தாம் நிம்மதியாய் இருக்கும் போலிருந்தது.

நடைப்பயிற்சிக்கு அதிகாலையிலேயே எழும் நான் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்ததோடு இருசக்கர வாகனத்தை எடுப்பதைக் கண்ட மனைவி  வாக்கிங் இன்னைக்கு டூவீலர்லயா? என்றாள் நக்கலாக.

அப்படித்தான்னு வச்சுக்க எனச் சொல்லிவிட்டு அவளின் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பி இருபது நிமிடத்தில் பேருந்து நிலையத்தத்திற்கு வந்தேன். நேற்றிரவு இருந்த சூழல் பகலில் முழுதாக மாறி இருந்தது. வாகனங்களைப் போலவே மனிதர்களும் தங்களின் ஓட்டத்தை ஆரம்பித்திருந்தனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டே இருந்தது. மின்கம்பத்திற்கு அருகில் நோட்டமிட்டேன். அங்கும், இங்குமாகச் சுற்றிப் பார்த்தேன். தென்படவில்லை. மனநிலை சரியில்லாமல் இங்கே திரிந்தவரைப்  பார்த்தீங்களான்னு அதிகாலை நேரத்தில் யாரிடமாவது கேட்கப் போய் அவர்கள் என்னையும் அப்படியாக நினைத்து விடக்கூடும் என்ற தயக்கத்தால்  விசாரிக்கவும் மனமில்லை.

பேருந்து நிலையத்திலிருந்து சற்றுத் தள்ளி இஞ்சி டீ விற்பதற்காக மட்டுமே ஒரு கடை இருக்கிறது. கல்லூரி நாட்களிலும், உள்ளூரில் பணி செய்த நாட்களிலும் அங்கு டீ குடிப்பதற்காகவே சைக்கிளில் அரைமணி நேரம் மிதித்து வருவதுண்டு. வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற  பின்பு ஊருக்கு வரும் சொற்ப விடுமுறை நாட்களில் அப்படியாகத் தேடித் திரிந்த இடங்களுக்குச் செல்வது இயலாமலே போயிருந்தது. இன்று அங்கு டீ சாப்பிடலாம் என நினைத்துச் சென்றேன்.

கடைக்கு முன் என் இருசக்கர வாகனத்தை நிறுத்தியதும் கல்லாவில் இருந்தவர் என்னை முன்பே அறிந்தவரைப் போல ஒரு சிறு புன்னகை பூத்தார். வியாபார நுணுக்கம். டீ சொன்ன கையோடு தட்டில் அடுக்கி வைத்திருந்த பலகாரத்தில் இருந்து ஒரு வடையையும், அன்றைய நாளிதழையும் எடுத்துக் கொண்டு கடை வாசலில் இருந்த இருக்கையில் அமர வந்தேன்.

ஒரு உருவம் எனக்கு நெருக்கமாக நிற்பது போலிருக்க திரும்பிப் பார்த்தால் நான் தேடி வந்த நபர். முகத்தைத் தன் கைகளால் அரைகுறையாக மூடிக் கொண்டு நின்றவரிடம் என் அருகில் இருந்த பெரியவர்இந்தாஎன்று ஒரு வடையை நீட்ட அதை வாங்கியதும் சட்டென விலகி எதிரில் இருந்த இடிந்த கட்டிடத்தின் வாசலில் போய் உட்கார்ந்து கொண்டார்.

இயற்கையின் வெளிச்சத்தில் அவரின் முகமும், உருவமும் நன்கு தெரிந்தது. பனி படர்ந்த கண்ணாடியின் பின் நின்று ஒரு உருவம் அசைந்தாடுவதைப் போல என் நினைவில் அந்த முகம் தெளிவின்றி இருப்பதையும், அதை அறிய மனம் தீவிரம் கொண்டிருப்பதையும் உணர முடிந்தது.

டீ கடைக்காரரிடம் அவர் எந்த ஊருண்ணே? என்றேன்.

யாரு? அந்தடேபைத்தியமா? தெரியல தம்பி. மூணு, நாழு மாசமா இங்கிட்டுத்தான் திரியறான். நம்ம கடைக்கு வருகிறவங்க எதுனா வாங்கிக் கொடுத்தா திம்பான். அந்தத் திண்ணையில தான் உட்கார்ந்துக் கிட்டுடே”, ”டேன்னு என்னத்தையோ பிணாத்திக்கிட்டிருப்பான்.

எட்டிக் கிழித்தாலும் வருத்தப்படாத நிலையில் நான் போட்டிருந்த சட்டையும், கூடவே மனித நடமாட்டமும் இருக்கின்ற தைரியத்தில் அவரருகில் செல்ல முயன்றேன். சுற்றியிருப்பவர்கள் விநோதமாக என்னைப் பார்ப்பது தெரிந்தது. அருகில் சென்றதும் இருட்டறையில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியாய் மனம் சட்டென அடையாளம் கண்டு கொண்டது. “டேசண்டாளா! நான் எடுக்கலடே. நம்புடேஎன்ற அவரின் உச்சரிப்பின் குரலும்  தெளிவாய் கேட்கமசூதுஎனக் கட்டிப் பிடித்தேன்.

மலங்க, மலங்க என்னைப் பார்த்தவரின் கண்களின் ஓரத்தில் லேசாய் ஈரம் கசிவதைப் போலிருந்தது. அப்பொழுதும்டேசண்டாளா! நான் எடுக்கலடே. நம்புடே”  என்ற உச்சரிப்பை மட்டும் நிறுத்தவே இல்லை. அந்த இடத்திலிருந்து அவர் எழுந்து போய் விடாமல் இருப்பதற்காக இரண்டு வடையை வாங்கி அவரிடம் கொடுத்தேன்.

 தம்பி…….இவன் உனக்குச் சொந்தமா? என்றார் பக்கத்தில் பழக்கடை வைத்திருந்த பெரியவர்.

தெரிந்தவர்என்று மட்டும் சொல்லி விட்டு அலைபேசியில் நண்பனை அழைத்து, ”உடனே கேணிக்கரைக்கு வாறீயா? வரும் போது முடிவெட்டுவதற்கான ஆயத்தங்களோடு ஒரு பார்பரை கூட்டிக்கிட்டு வர முடியுமா?” என்று கேட்டேன்.

உனக்கு என்ன ஆச்சு? சம்பந்தமில்லாத இடத்துல இருந்து காலையிலயே கூப்பிடுற. கூடவே முடிவெட்ட ஆள் கூட்டிக்கிட்டு வரச் சொல்லுறஎன்று அவன் கேட்டதும், ”முதல்ல நீ வா. மற்றதை அப்புறமா சொல்றேன்”.

அரைமணி நேரத்திற்குள் அவன் வருவதாகச் சொன்னதால் அதுவரையிலும் அவரை அங்கேயே இருக்க வைக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது.  பக்கத்தில் இருந்த கடையில் இரண்டு ஆப்பிள் பழங்களை வாங்கி கையில் வைத்துக் கொண்டு அவருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு இடிந்த திண்டில் அமர்ந்து கொண்டேன். அவர் தலையைத் தொட்டதும் லேசாக ஏறிட்டுப் பார்த்தார். அந்தப் பார்வையும், அந்தப் பார்வையில் மங்காமல் தெரியும் பரிவும் தான்மசூது”.

இரண்டாண்டுகளுக்கு முன் துபாயில் நான் பணி புரிந்த நிறுவனத்தில் வேலை செய்தவர் என்பதோடு என் அறை நண்பராகவும் இருந்தவர். எட்டுப் பேர் கொண்ட எங்கள் அறையில் மட்டுமல்ல நிறுவனத்திலும் என் மாவட்டத்துக்காரர்களே அதிகம்இவர் மட்டும் கடையநல்லூருக்குப் பக்கத்தில் உள்ள ஊரைச் சேர்ந்தவர். வயதில் என்னை விடப் பல வருடம் மூத்தவராக இருந்த போதும் மசூது என்று பெயர் சொல்லியே அழைப்பேன்,

அவரின் வித்தியாசமான உச்சரிப்பிற்காகவே நண்பர்கள் ஓயாது சீண்டிக் கொண்டே இருப்போம். சென்னை வாசிகளுக்குடே ஙோ……” என்பதைப் போல எது சொல்ல ஆரம்பித்தாலும் அவருக்கு முதல் வார்த்தைடே சண்டாளா”!

மேலதிகாரிகளின் வசவுகளிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள், வேலையை எப்படி எளிதாகச் செய்வது, வேலைத் தளத்தில் பிரச்சனைகள் வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது, அங்கு பேசும் மொழியைக் கற்றுத் தருவது எனத் தான்  கற்றிருந்த விசயங்களைப் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த என்னைப் போன்ற பலருக்கும் அவ்வப்போது சொல்லித் தந்து கொண்டே இருப்பார். மேலதிகாரியிடம் வசவு வாங்கி விட்டு முகம் கோண படுக்கையில் யாரும் அமர்ந்திருப்பதைக் கண்டால்டே சண்டாளா…….வயசுப்பய இதுக்குலாமாடே பொருமுவ. வேலைப் பிரச்சனையை அங்கேயே தூரப் போட்டுட்டு வீட்டுக்கு வாடேஎன்பார். இப்படியான அறிவுரைகள் பின்னாளில் வேலைச் சூழலில் ஏற்படுகின்ற நெருக்கடிகளையும், வாழ்வின் கடினமான தருணங்களையும் கடந்து வர எனக்கு உதவியிருக்கிறது.

துபாயில் அப்போது எங்களோடு இருந்த நண்பனை அலைபேசியில் அழைத்து மசூது இப்ப ஊருலயா இருக்காரு? என்றதும், ”அவர் கேன்சலில் போய் ஒரு வருசமாச்சு. சென்னையில ரியல் எஸ்டேட் பன்னுறவங்களுக்கும், பில்டிங் காண்ட்ராக்டர்களுக்கும் பணம் கொடுத்து வாங்குற ஒரு பெரிய புள்ளிக்கிட்ட வேலைக்கு இருக்கார்னு பசங்க சொன்னானுக. நம்ம கூட இருந்த பசங்களும் அங்கே, இங்கேன்னு போயிட்டதால அடிக்கடித் தகவல் கேட்டுக்கிற முடியறதில்லைஎன்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் கால் விரலை ஏதோ ஒன்று உரசுவது போலிருக்க அலைபேசியை அணைத்து விட்டு குனிந்து பார்த்தேன். தன் கை விரலால் என் கால் விரல்களை தொட்டுக் கொண்டிருந்தார்.

செருப்பு வேணுமா மசூது? என்று கேட்டதும் ஏதோ தொடக்கூடாத ஒன்றைத் தொட்டு விட்டதைப் போல கையை எடுத்துக் கொண்டார். “டேசண்டாளா! நான் எடுக்கலடே. நம்புடேஎன்று சொல்வதை மட்டும் நிறுத்தவே இல்லை.

சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வந்து சேர்ந்த நண்பன், ”என்ன பைத்தியக்கரனோட உட்கார்ந்திருக்க. வரும் போது வீட்டுக்குப் போயிட்டுத் தான் வாரேன். நேத்துக் கதையை தங்கச்சி சொன்னுச்சு. இவன் தானா அது? என்றதும் வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ”இது நக்கலடிக்க வேண்டிய சங்கதி இல்ல. இவர் மசூது. என் நண்பர். எனக்கு வேலை கற்றுத்தந்தவர்என்றேன்.

இவன் நம்ம ஊர்க் காரன் மாதிரி தெரியலயேஎன்று கேட்டவனிடம்  கடையநல்லூர் பக்கம் என்று சொல்லிவிட்டு முடிவெட்ட ஆள் கூட்டிட்டு வர முடியுமான்னு கேட்டிருந்தனே என்றேன்.

இன்னைக்குசலூன்கிற பேரு மாறிஅழகுநிலையம்னு அன்னைத் தமிழில் மாறிடுச்சு. தெருவுல வச்சு வெட்டுன காலம் எல்லாம் போயி ஏசி வந்துடுச்சு. அங்கே இருந்தெல்லாம யாரையும் கூட்டிக்கிட்டு வர முடியாதுடா. இவனையும் அங்கே கூட்டிக்கிட்டு போய் வெட்டச் சொல்லவும் முடியாது. ஒரு நல்ல சாப்பாடு வாங்கிட்டு வாரேன். அவன்ட்ட கொடுத்துட்டு வீட்டுக்கு கிளம்புஎன்றவனிடம் அப்படியெல்லாம் விட்டுட்டு வர முடியாது என்றேன்.

என் பிடிவாதத்தால்நாமக்கட்டிக்கிட்ட கேட்டுப் பார்க்கிறேன்என்றபடி அலைபேசியில் யாரையோ அழைத்து கடுகடுத்த குரலில், “யோவ் நாமக்கட்டி நான் தான் பேசுறேன். கத்தி, சீப்பெல்லாம் எடுத்துக்கிட்டு சைக்கிள்ள  கேணிக்கரை இஞ்சிக்கடைக்கு வந்துடுஎன்று சொல்லி விட்டு என்னருகில் வந்தமர்ந்தவன்டேசண்டாளா! நான் எடுக்கலடே. நம்புடேஎன அவர் சொன்னதைக் கேட்டதும், ”என்னத்தை எடுக்கலையாம்? நீ தான் நம்புறேன்னு சொல்ல வேண்டியது தானே!” என்றான் குசும்புத்தனம் இழையோட.

உங்களுக்கெல்லாம் எப்ப, எதைக் கிண்டலடிக்கனும்னு தெரியாதாடா? எப்பவுமே விளையாட்டுத்தனம் தானா?” என்று நான் எரிச்சலோடு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு வயதானவர் சைக்கிளில் வந்து இறங்கினார், நெற்றியில் பெரிய நாமமிட்டிருந்தவரிடம் நண்பன் விபரத்தைச் சொல்ல அரைகுறை மனதோடு சம்மதித்தவர் அந்த மரத்துக்குக் கீழே போயிடலாம் என்றார்.

குத்துக்கால் வைத்து அதை இரண்டு கைகளாலும் பிடித்தபடி அமர்ந்திருந்த மசூதின் அக்குள் வழியாக என் கையைக் கொடுத்து  “வாஎன்றேன். மிரள, மிரளப் பார்த்த படி என்னோடு வந்தவர் கத்தி, சீப்பெல்லாம் பார்த்ததும் திரும்பிப் போக முயல இங்கே வந்து உட்காரு எனச் சொல்லிக் கொண்டே கொஞ்சம் தண்ணீரை கையில் எடுத்து அவரின் முகத்தில் நாமக்கட்டி விசிறி அடித்ததும் உட்கார்ந்தவர் முடிவெட்டி முடிக்கும் வரை அசையவில்லை. முகத்தில் இருக்கும் முடியை வழிக்கப்போனவரிடம் முழுசா மழிக்க வேணாம். நீளமா இருக்குறதை மட்டும் வெட்டி விடுங்கள். தாடி வைத்த மசூது தான் எனக்கு அறிமுகம் என்பதால் அப்படியே இருக்கட்டும் என நினைத்தேன்.

உருவத்தில் மட்டுமே நான் பார்த்த மசூதாக இருந்தவரிடம் என் நண்பன் டீ வாங்கி வந்து தர அந்தக் கோப்பையை இரண்டு கைகளாலும் ஏந்தி அவர் வாங்கியதைக் கண்டதும் மனம் கலங்கிப் போனது.

துபாயில் இருந்த சமயத்தில் ஒருநாள் டீ அருந்துவதற்காக அவரோடும், நண்பர்களோடும் அமர்ந்திருந்த போதுடே சண்டாளங்களா………..நேத்திக்கு தொலைக்காட்சியில ஒரு படம் காட்டுனானே. யாராச்சும் பாத்தீங்களாடே. அதுல காப்பியை எப்படி குடிக்கிறானுவன்னு தெரியுமாடேஇரண்டு கையிலும் குவளையை ஏந்தி அப்படியே இரசிச்சு குடிக்கானுவ. அதுக்கு பேர்ஜென்னாம். எதையும் அமைதியா, இரசிச்சு செய்யனுமாம்டே. நாமளும் அப்படி இரண்டு கையிலும் ஏந்தி இரசிச்சு குடிப்போம்டேஎன்றார். நாங்கள் எல்லாம் அவரைக் கேலி பேச அன்றிலிருந்து அவர் அப்படித்தான் குடிப்பார். இப்போதும் அவர் அப்படி வாங்கியது ஆச்சர்யமாக இருந்தது.

அருகில் இருந்த ரெடிமேட் கடையில் ஒரு கைலி, சட்டை, துண்டு மூன்றையும் வாங்கிக் கொண்ட பின் நண்பனிடம், ”பக்கத்துல ஊருணி ஏதும் இருந்தா குளிக்க வச்சுடலாம்என்றதும்பக்கத்துல இல்ல. கொஞ்சம் தள்ளி போகனும். இவரை எப்படி கூட்டிட்டு போறது?” என்றான்.

ஆரம்பத்தில்இவன்எனச் சொன்னவன் இப்போதுஇவர்எனச் சொன்னதைக் கவனித்தேன். என் பைக்குல கூட்டிட்டு போயிடலாம். பைக்கில் உட்கார மறுத்தவரை வலுக்கட்டாயமாக ஏற்றினேன். நண்பன் வண்டியை ஓட்ட அவரை நடுவில் உட்கார வைத்து அவருக்குப் பின் அமர்ந்து கொண்டேன். இறை நாமம் சொல்வதைப் போலடேசண்டாளா! நான் எடுக்கலடே. நம்புடேஎன்று சொல்லிக் கொண்டே வந்தார்.

கடைய நல்லூர் பக்கம்னு சொல்ற. எப்படி இங்கே வந்தாரு?

துபாயில இருக்குற ஃபிரண்டு கிட்ட விசாரிச்சதுல சென்னையில் பெரிய பணப்புழக்கம் இருந்த இடத்துல வேலைக்கு இருந்திருக்காருன்னு மட்டும் தெரியுது. வேற ஒரு விசயமும் தெரியல. மனநிலை சரியில்லாமல் இருக்கிறதால ஏர்வாடி தர்காவுக்கு வந்து வழி தவறியிருக்கலாம். இல்லைன்னா அவருடைய உறவினர்களே கூட இங்கே  கொண்டு வந்து விட்டுப் போயிருக்கலாம்.

குளிக்கவைத்து புது ஆடைகளை மாட்டி விட்ட போது அவரின் கணுக்கால் பகுதி வீங்கி  இருப்பதைக் கவனித்தேன். எதில் போய் இடித்துக் கொண்டாரோ என நினைக்கும் போதே முன்பு ஒருமுறை அவருக்கு கால் வீங்கக் காரணமான நிகழ்வு நினைவுக்கு வந்தது. வேலைக்குச் சென்று விட்டு அறைக்கு திரும்பி வந்தால் இரவு ஷிப்ட் வேலைக்குப் போக வேண்டியவர் காலில் பெரிய கட்டோடு படுத்துக் கிடந்தார். என்ன ஆச்சு மசூது? எங்கேயும் விழுந்துட்டீயா? என நண்பர் கேட்டது தான் தாமதம், “டே சண்டாளா…..அத ஏன் கேக்க? மதியம் சோத்த வுண்டுட்டு படுத்துக் கிடந்தேன். நல்ல தூக்கத்துல பூனை காலைக் கடிக்கிற மாதிரி  இருந்துச்சுடே. ”சூன்னு சொல்லி படக்குன்னு கால்ட்ட எட்டி உதைஞ்சப் பொறவு தான் தெரியுது அது கனவுன்னு. கால் சொவத்துல அடிச்சு மொலி வீங்கிடுச்சுடே. வலியோடு ஆசுபத்திரிக்கு போனா அந்தச் சண்டாளன் எக்ஸ் ரே  எல்லாம் எடுத்து பாத்துட்டு பெரிய கட்டப் போட்டு மூனு நாள் லீவு எழுதிக் கொடுத்துட்டான்டேஎன்றார் பரிதாபமாக. இந்த நிலையிலும் மெல்லச் சிரித்துக் கொண்டேன்

அடுத்து என்னஎன்பதைப் போல பார்த்த நண்பனிடம் இப்போது விசாரித்துச் செய்வதற்கு நேரமில்லை. எனக்கும் லீவு முடிய இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கு. அதுவரை இங்கிருக்கும் சுந்தரம் மனநல காப்பகத்தில் சேர்த்து விட்டுருவோம். மாதா மாதம் மனநலக் காப்பகத்துக்கு நான் பணம் கட்டி விடுகிறேன். நேரம் கிடைக்கும் போது நீ போய் பார்த்துக்க. அப்பப்ப எனக்கு விபரம் சொல்லு. துபாயில் இருக்கும் நண்பர்கள் மூலமா விசாரித்து பார்க்கிறேன். தகவல்கள் கிடைத்தால் அவரின் குடும்பத்திற்குச் சொல்லலாம். இல்லை என்றால் இங்கேயே இருக்கட்டும்.

இருசக்கர வாகனத்தில் அவர் எங்களோடு அமர்ந்து வந்த தோரணை பிதாமகன் விக்ரமை எனக்கு நினைவூட்டியது. மனநலக் காப்பகத்திற்குள் அழைத்துப் போனதும் மிரண்டு வெளியே ஓடி வர எத்தனித்தவரை அங்கிருந்த ஊழியர்கள் தடுத்து ஒரு அறைக்குள் கொண்டு போயினர். அந்த அறையின் திறந்திருந்த ஜன்னல் வழியாக எங்களை நோக்கி  “டேசண்டாளா! நான் எடுக்கலடே. நம்புடேஎன சொல்லிக் கொண்டு கையை நீட்டிய படியே இருந்தார். மனநலக்காப்பகத்தில்  இருந்தவர் ஆரம்பத்தில் அப்படித் தான் இருப்பாங்க. போகப் போக சரியாயிடும் என்றார்.

காப்பகத்தை விட்டு வெளியேறத் தயாரான போது இவ்வளவு நேரமும் கேட்டிராத பலமான சப்தத்தில்டேசண்டாளா! நான் எடுக்கலடே. நம்புடேஎன்று அவர் கத்தியதைக் கேட்டதும் ஒரு கணம் ஆடிப்போனேன். அந்தக்குரல் ““டேசண்டாளா! நான் பைத்தியம் இல்லடே. நம்புடேஎன்று சொல்வதைப் போலவே இருந்தது.

நான் நகர்ந்து செல்லச் செல்ல அவரின் குரல் இன்னும் சப்தமாகவும், வேகமாகவும் இருந்தது.

அருகில் வந்து கொண்டிருந்த நண்பனிடம், ”ஒருவேளை அவர் பைத்தியம் இல்லையோ?” என்று கேட்டதும் என் தோள்களைத் தொட்டு அமுக்கியவன், “மனநிலை பிறழ்ந்தவர்கள் ஒரு போதும் அப்படி தன்னை ஒத்துக் கொள்வதில்லை. பைத்தியம் என்றானவரை பைத்தியம் இல்லை என்று எப்படி கூட்டிப் போக முடியும்?” என்றான்.

அந்தக் குரலைக் கடந்து வர மனமில்லாத போதும் பைத்தியம் என்றானவர் பைத்தியாமாகவே இருந்து விடக்கூடாது என்பதால் வயது வந்த பிள்ளையை இழந்த பெற்றோரின் துக்கத்தோடு காப்பகத்தை விட்டு வெளியேறினேன்

நன்றி : உயிர் எழுத்து மாத இதழ்