Monday 4 April 2016

உங்களின் முதல் அடையாளம்!

மரத்துக்கு வேரைப் போல, கட்டிடத்திற்கு அஸ்திவாரத்தைப் போல வெற்றி செயல்களுக்கு அஸ்திவாரமாய் இருக்ககூடியதுமுடிவெடுத்தல்”. முடிவெடுத்தல் என்ற அடையாளத்தின் மீது தான் மற்ற எல்லா தனித்த அடையாளங்களும் நிலைநிறுத்தப் படுகின்றன. எனவே முடிவெடுத்தலை உங்களின் முதல் அடையாளமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அது தான் வெற்றிப் பயணத்திற்கான முதல் படி. அதனால் தான் இன்று தன்னம்பிக்கை சார்ந்து பேசுகின்ற, எழுதுகின்ற பலரும் அறிவுறுத்துகின்ற விசயம்முடிவெடுக்க பழகுங்கள்”.

இலக்கு, திட்டமிடுதல், செயல்படுதல் என்ற வெற்றிக்கான சரடுகள் முடிவெடுத்தலில் தான் ஆரம்பமாகிறது. இந்த ஆரம்பம் அதோடு நிற்பதில்லை. மாறாக, அந்த செயல் ஒரு முடிவுக்கு வரும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். முடிவெடுத்தல் என்ற புள்ளியிலிருந்து தான் உங்களின் அடுத்தடுத்த நிலைகளுக்கு தாவிச் செல்ல முடியும். செயல் சார்ந்து இது மூன்று நிலைகளில் நிகழ்கின்றது.

1. இலக்கை தீர்மானிக்க முடிவெடுத்தல் :

நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? என முடிவு செய்தால் தான் அதற்கான இலக்கை உங்களால் உருவாக்கிக் கொண்டு அதற்காக செயல்பட முடியும்.

2. இலக்கை அடைவதற்கான திட்டமிடலை உருவாக்கும் போது முடிவெடுத்தல் :

எப்படி அந்த செயலைச் செய்வது? யார் மூலம் செய்வது? யாரிடம் உதவி கோருவது? சாதக, பாதக அம்சங்கள் எப்படி இருக்கும்? என்பன போன்ற ஒவ்வொரு விசயத்தையும் முடிவு செய்தால் தான் அதற்கான திட்டங்களை வகுக்க முடியும்.

3. சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்தல் :

முதலிரண்டு நிலைகளில் உள்ள முடிவெடுத்தல் மாறாதது. நிலையானது. அது மாறினால் ஆபத்து. முதலுக்கே மோசமாகி விடும். இதற்கு அப்படியே எதிர்மறை சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்தல். இது மாறக்கூடியது. இந்த நிலையில் நீங்கள் எடுக்கும் முடிவு தான் முந்தைய இரு நிலைகளிலும் எடுத்த முடிவை வெற்றி பெற வைக்கும். உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டும். உதாரணமாக, ஒரு மத ஊர்வலம் நடைபெறுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் கலவரம் ஏதும் நிகழாமல் தடுப்பது தான் மாவட்ட நிர்வாகத்தின் இலக்காக இருக்கும். அதையொட்டி முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் சில விசயங்களைத் திட்டமிட்டு வழிகாட்டல்களாக்கி அங்கு பணியிலிருக்கும் காவல்துறையிடம் தரப்படும். ஆனால் எதிர்பாராதவிதமாக கலவரம் ஊர்வலத்தில் நடந்துவிட்டால் அங்கு பணியிலிருக்கும் உயரதிகாரி எடுக்கும் அந்த சூழ்நிலைக்கேற்ற முடிவு தான் மாவட்ட நிர்வாகத்தின் இலக்கை வெற்றி பெற வைக்கும். அதனால் தான் சொல்கிறேன். சூழ்நிலைக்கேற்ப எடுக்கும் முடிவெடுத்தலில் கவனமாக இருங்கள். சூழ்நிலைக்கேற்ப நீங்கள் எடுக்கும் முடிவுகள் தான் அந்த சூழ்நிலையை உங்களுக்கு சாதகமானதாக ஆக்கித்தரும்.

கொட்டும் மழை, கடும் இருள், யார் ஆற்றைக் கடக்கப் போகிறார்கள் என பிரிட்டிஷ் படை நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த சூழ்நிலை தான் டலவெர் ஆற்றைக் கடக்க சரியான நேரம் என முடிவெடுத்தார் ஜார்ஜ் வாசிங்டன். அவரின் அந்த முடிவு அமெரிக்காவின் விடுதலைக்கே அடித்தளமிட்டது.

துரதிருஷ்டவசமாக நம்மில் பலரும் முடிவெடுத்தலின் இந்த மூன்று நிலைகளுக்குமான வித்தியாசங்களை உணராமல் நான் எடுத்த முடிவு. அது எந்தச்சூழலுக்கும் சரியாகவே இருக்கும். அதை யாருக்காகவும், எப்பொழுதும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என வீண் பிடிவாதம் மூலம் இலக்குகளை எட்டாமல் பாதியிலேயே விட்டு விடுகின்றனர் அல்லது சாதாரண வாழ்க்கைக்கு மனதை தேற்றிக் கொள்கின்றனர். வெற்றியாளர்கள் இப்படி இருப்பதில்லை. அவர்கள் சூழ்நிலைக்கேற்ப தங்களுடைய முடிவுகளை மாற்றிக் கொண்டோ அல்லது விட்டுக்கொடுத்தோ இலக்கு நோக்கி நகர்வதிலேயே கவனமாக இருக்கின்றனர். அடையவும் செய்கின்றனர்.

வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைக்க கூடிய அளவுக்கு வலிமை வாய்ந்த முடிவெடுத்தலை நாம் எப்பொழுதுமே மற்றவர்களைச் சார்ந்தே எடுக்கின்றோம். சுயமாக, சுய சிந்தனையின் வழி சாத்தியங்களை ஆராய்ந்து எடுப்பதில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை ஓஷோ ஒரு சம்பவம் மூலம் சொல்கிறார்.

ஒரு கணவனும், மனைவியும் ஓஷோவிடம் வந்துஎங்கள் இளைய மகனைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகின்றோம். எங்கள் கவலை தீர நீங்கள் தான் வழி கூற வேண்டும்என்றனர்.

உங்கள் இளைய மகனுக்கு என்னவாயிற்று? என்றார் ஓஷோ.

அதற்கு அந்த தம்பதியினர், ”எங்கள் மூத்த மகன் எங்கள் சொல் கேட்டு அப்படியே நடக்கின்றான். எங்கள் பேச்சை மீறி எதுவும் செய்வதில்லை. ஆனால் இளைய மகனோ அப்படியில்லை. எங்களை மதிக்காமல் நாங்கள் எது சொன்னாலும் கேட்காமல் அவன் விருப்பப்படியே நடந்து கொள்கிறான்என்றனர்.

இதைக் கேட்டு சிரித்த ஓஷோ, “உங்கள் மூத்த மகனை உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்து உங்களின் நகலாகவே அவனை மாற்றி விட்டீர்கள். இளைய மகனையாவது விட்டு விடுங்கள். அவன் தன் போக்கில் வளரட்டும். அப்பொழுது தான் அவனால் சுயமாக முடிவெடுக்க முடியும். உங்கள் மூத்தமகன் இப்பொழுது உங்கள் இஷ்டப்படி செயல்படுவான். உங்களுக்கு பின் அவன் மனைவி, அவளுக்கு பின் அவனுடைய நண்பர்கள், உறவினர்கள் என அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டே செயல்படுவான். அவனிடம் சுயமாக நினைக்கும் ஆற்றல் இல்லாதவாறு அவனுடைய மனவளர்ச்சியை மழுங்கடித்து விட்டீர்களேஎன்றார். ஓஷோவிடம் குறைபட்டுக் கொண்டு வந்த இந்த தம்பதிகளைப் போலவே இன்று பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதிலிருந்து என்ன பாடத்தை எடுத்து படிக்க வைப்பது, யாரை திருமணம் செய்து கொள்ளச் சொல்வது என்பது வரை பிறர் அபிப்ராயங்களைக் கொண்டே பல பெற்றோர்கள் முடிவு செய்கின்றனர். இப்படி வளர்க்கப்படுவதால் நாமும் அதன்படியே வாழப் பழகி விட்டோம் என்பதே நிதர்சனம். இந்த நிதர்சனத்தை முதலில் உடைத்தெறியுங்கள்.

பிறர் அபிப்ராயங்களைப் பற்றி கவலைப்படாமல் காந்தி அகிம்சை எனவும், நேதாஜி ஆயுதப் போராட்டம் எனவும் முடிவெடுத்தனர். இருவருக்கும் இலக்கு, போராட்டக்களம் இரண்டுமே ஒன்றாக இருந்த போதும் அவரவர் சுய சிந்தனைகளோடு அப்போதிருந்த சூழலுக்கேற்ப முடிவெடுத்தனர். இக்கட்டான நிலையில் இராஜமானிய ஒழிப்பு, வங்கிகள் நாட்டுடைமையாக்கள், பங்காளதேஷ் என்ற தனி நாட்டை உருவாக்குவது என இந்திராகாந்தி எடுத்த முடிவு அவரை சிறந்த தலைவராக உலக அரங்கில் அடையாளப்படுத்தியது. நிதிநிலை அவ்வளவு போதுமானதாக இல்லை என அதிகாரிகள் சொன்ன போதும், துணிந்து மதிய உணவு திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது என காமராஜர் எடுத்த முடிவு பல குழந்தைகளுக்கு வாழ்வில் ஒளியேற்ற உதவும் கல்வி கிடைக்க வழிவகுத்தது. அடிமை முறையை ஒழிக்கும் பிரகடனத்தை வெளியிடுவது என லிங்கன் எடுத்த முடிவு ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றியமைத்தது. பேச்சாளனாக வேண்டுமென சுகி.சிவமும், எழுத்தாளனாக வேண்டுமென பெர்னாட்ஷாவும், தொழில் முனைவோராக வேண்டுமென எம்.எஸ். உதயமூர்த்தியும் எடுத்த முடிவுகள் தான் அவர்கள் வாழ்வை மாற்றியமைத்தது. நிதர்சனமாய் நம்முன் உட்கார்ந்திருக்கும் பழக்கங்களை உடைத்தெறிந்து சுயமாக அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுத்ததால் தான் வாழ்வின் உச்சாணிக் கொம்புகளில் சென்று அமர முடிந்தது.

இவர்களைப் போல எல்லோருமே முடிவெடுக்க ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசை சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. காரணம் இப்படியான முடிவெடுத்தலை அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியாது. அதற்காக எத்தணிக்கும் போதே உங்களை நோக்கி அறிவுரை என்ற பெயரில் பல கணைகள் பாய ஆரம்பித்து விடும். அவைகளின் தாக்கம் உங்களின் முடிவு வெற்றியைக் கொடுத்தால் மெதுவாகவும், தோல்வியைத் தந்தால் வேகமாகவும் இருக்கும்.

மாமா அப்பவே சொன்னான் கேட்டியா?”, ”எனக்கு தெரியும் அதுனால தான் ஆரம்பத்துலேயே தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். கேக்கமாட்டேனுட்டான்.” ”இவனை விட பெரிய ஆட்கள் எல்லாம் இதில் முயற்சி பண்ணி பலமா அடிவாங்கி இருக்கானுக. அதுலாம் தெரியாம போய் மாட்டிக்கிட்டான்என்பன போன்ற வெற்று வார்த்தைகளால் வரும் அறிவுரை விமர்சனங்களுக்காக உஙகளை நீங்களே முடக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நினைப்பது போல இவைகள் விமர்சனமோ, சிறந்த கருத்துகளோ இல்லை. ஆதங்கங்கள் மட்டுமே! உங்களைப் போல சுய முடிவெடுக்க முடியாதவர்களின் புலம்பல்கள்!! அவைகளை புறந்தள்ளுங்கள். சரியோ, தவறோ என் முடிவை நானே எடுத்தேன் என்று கர்வத்தோடு காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். அதே நேரம் அது தந்த அனுபவ அறிவையும் கவனத்தில் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

நன்றி : பாக்யா வார இதழ்