Thursday 29 June 2017

தன் அனுபவமாக்குங்கள்

இன்றேஇப்பொழுதே - இக்கணமே என்பது வெற்றியாளர்களின் வேதவாக்கு, இதன் உட்பொருள் உங்களின் செயலைத் தாமதிக்காமல் ஆரம்பியுங்கள் என்பதாகும். இதைப் படித்ததும் நானும் உடனே ஆரம்பிக்க வேண்டும் எனக் கிளம்பினீர்களேயானால் சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்பி புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து விடுவீர்கள். நடைமுறையில் உணர்ச்சி வயப்பட்டெல்லாம் எதையும் செய்து சினிமாக் கதாநாயகன் போல் ஒரே நாளில் வெற்றியைச் சுவிகரித்து விடமுடியாது. அதற்கு நிறைய முன் தயாரிப்புகள் தேவையாக இருக்கிறது

புதிதாக ஒரு தொழில் தொடங்கி நடத்த வேண்டும்  என்பது  உங்களின் இலக்கு என வைத்துக் கொள்வோம். அதைச் செயலாக்குவதற்கு முன் அந்தத் தொழில் பற்றிய அடிப்படை அறிவு (BASIC KNOWLEDGE)  உங்களுக்கு இருக்க வேண்டும்.

ஒரு இளைஞன் இரயில் தடங்களை மாற்றி விடும் வேலைக்குச் சேர்ந்திருந்தான். முதல் நாள் பயிற்சி ஆரம்பமானது. இரண்டு இரயில்கள் வந்து கொண்டிருந்தன. அதன் தடங்களை மாற்றி விட வேண்டியவனோ தலை தெறிக்க ஒரு பெயரை உரக்கச் சொல்லிய படியே ஓடினான். காரணம் புரியாமல் நின்ற அதிகாரிகள் அவனைப் பிடித்து வந்து விசாரித்தனர். அதற்கு அவன் இதுவரை என் அண்ணனும் இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிப் பார்த்ததில்லை சார். அதான் அவனையும் அழைத்து வர ஓடினேன் என்றானாம். அடிப்படை அறிவு இல்லாவிட்டால் என்னவாகும் என்பதற்கு இந்தக் கதையை நிர்வாக மேலாண்மை வகுப்புகளில் அடிக்கடிச் சொல்வார்கள். அடிப்படை அறிவு என்பது அனைத்திற்கும் முக்கியம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முன் அனுபவம் என்ற அதற்கு அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

அடிப்படை அறிவின் மூலமாகப் பெற்ற பயிற்சியை அனுபவமாக்க வேண்டும். அதற்கு நீங்கள் சிலகாலம் உங்கள் தொழில் சார்ந்த வேறு நிறுவனங்களில் பணி செய்து அனுபவங்களைத் திரட்ட வேண்டும். ஊழியத்திற்கு ஊதியம் என்ற நிலையில் கிடைக்கும் இந்த அனுபவம் பின்னாளில் நீங்கள் உங்களின் இலக்காக இருக்கக்கூடிய தொழிலைச் சுயமாகத் தொடங்கும் போது ஏற்படும் இடர்களைச் சமாளிக்க உதவும்

அனுபவங்களுக்காக இப்படிக் காத்திருக்கும் காலத்தில் தான் பலரும் தங்களின் இலக்குகளை தவற விட்டு விடுகின்றனர். செய்து கொண்டிருக்கின்ற வேலையில் கிடைக்கும் ஊதியம், சலுகைகள், பாதுகாப்பு உணர்வு ஆகியவைகளால் இலக்குகளை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அனுபவங்களைப் பெறுவதற்காக மட்டுமே இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். இலக்கில் இருக்க வேண்டிய கவனம் அதிலிருந்து விலக ஆரம்பித்து விடுகிறது. ஆனால் வெற்றியாளர்கள் இந்தத் தவறைச் செய்வதில்லை, துறைமுகத்தை நோக்கி மட்டுமே நகரும் கப்பல்களைப் போல தங்களின் இலக்கு நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பார்கள்,

உங்களின் இலக்கைச் சென்றடைவதற்கு உதவக்கூடிய அடிப்படையான பயிற்சிகளைப் பெற எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். ஆனால் அதற்கு ஈடான அளவில் அனுபவங்களைப் பெற காத்திருக்க வேண்டியதில்லை என்பது வெற்றியாளர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் அனுபவப் பாடம்! இதில் உண்மை இல்லாமல் இல்லை. காரணம் அனுபவம் என்பது தொடர் செயல்பாடுகளால் சேகரிக்கபட வேண்டிய ஒரு நிகழ்வாகும், அதை நீங்கள் முன் அனுபவமாக மட்டும் பெற்றுக் கொண்டே இருந்தால் சுய அனுபவங்களை ஒருநாளும் பெற முடியாது. முன் அனுபவம் (PRIOR EXPERIENCE) என்ற நிலையில் இருந்து எப்பொழுது சுய அனுபவம் (SELF EXPERIENCE) நோக்கி நீங்கள் நகர ஆரம்பிக்கிறீர்களோ அப்பொழுது உங்களின் வெற்றிக்கான பயணமும் ஆரம்பமாகி விடுகிறது.

அனுபவம் போதவில்லை எனச் சொல்லிக் கொண்டு காத்திருப்பதற்குப் பதிலாக கிடைத்தவரைக்குமான அனுபவங்களை வைத்துக் கொண்டு செயல்களை ஆரம்பியுங்கள். பல நல்ல வாய்ப்புகள் இப்படியான காத்திருப்பு சமயங்களில் தான் கடந்து போய் விடுகின்றன. ”காத்திருப்பவர்களுக்கு துரிதமாகச் செயல்படுபவர்கள் விட்டுச் சென்ற மிச்சங்கள் மட்டுமே கிடைக்கும்என்கிறார் ஆப்ரகாம் லிங்கன்.

அனுபவ அறிவை நூற்றுக்கு நூறு என்ற முழுமையான அளவில்; பெற்ற பின்பே செயல்பட நினைப்பீர்களேயானால் அது ஒரு நாளும் சாத்தியமாகாது. மாறாக, இருக்கின்ற அனுபவ அறிவைக் கொண்டு வெற்றியை சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளைத் தொடங்குங்கள். முடிவில் உறுதியாக இருப்பீர்களேயானால் தொடக்கம் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. தானாகவே அது உங்களை நகர்த்த ஆரம்பித்து விடும். காத்திருப்பதை விட ஓரடி முன்னே நகர்வது உத்தமமில்லையா

இத்தனைக்குப் பிறகும் ஒரு செயலைச் செய்ய முடியாமல் போகிறதென்றால் அதற்குக் கடந்த காலங்களில் சந்தித்தவர்களின், உறவினர்களின் வாழ்க்கையில் இப்படியான தருணங்களில் நிகழ்ந்தவைகளைக் கேட்டும், அறிந்தும் அதுபோல தனக்கும் ஆகிவிடுமோ? விரும்பியதைச் செய்ய முயன்று இருக்கின்ற வேலையவும் பறி கொடுத்து விடுவோமா? நினைத்த படி நடக்காமல் தோல்வி அடைந்து விட்டால் மற்றவர்கள் எதுவும் செல்வார்களோ? என்ற அடுக்கடுக்கான கேள்விகளின் வழி எழும் அச்ச உணர்வே காரணமாக இருக்கிறது. செயல் தடைகளை உருவாக்குகின்ற இப்படியான  கேள்விகள் வெற்றியாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கவே செய்யும். ஆனால் அவர்கள் அதைத்  தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டனர். இலக்கில் இருந்து விலகி நிற்பதற்கான காரணிகளாகப் பார்க்காமல் அவைகளை எதிர் கொள்ளத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டனர்

நீங்கள் எதன் பொருட்டு அச்சம் கொள்கிறீர்களோ அதற்குள் தான் அதற்கான தீர்வுகளும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான திறன், ஆரம்ப ஆயத்தப் பணிக்கான அனுபவம் ஆகிய இரண்டையும் பெற்ற பிறகு காரியத்தை ஆரம்பியுங்கள். உங்களிடமிருக்கும் முன் அனுபவத்தைச் சுய அனுபவமாக மாற்றப் போகும் அந்த ஆரம்பம் உங்கள் வெற்றிக்கான ஆரம்பமாக இருக்கும்

நன்றி : அச்சாரம் மாத இதழ்


2 comments:

  1. இலக்கு ஒன்றே கவனம் தேவை என்பதை அருமையாக சொல்லியுள்ளீர்கள்...

    ReplyDelete
  2. தன்னம்பிக்கையை மிகுவிக்கும் அருமையான பதிவு.

    ReplyDelete