Monday 24 July 2017

முடியும் என்ற நம்பிக்கை

கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்வது கஷ்டம் என்பதைப் போலமுடியும்என்பதை விடமுடியாதுஎன்று சொல்வது இன்று ஈசியான செயலாகி விட்டது. எல்லோருக்குமானதைத் தனக்கானதாக ஏற்றுக் கொள்ளாதவர்களே வெற்றியாள்ர்களாக மிளிர்கின்றனர் என்ற விதி இங்கும் பொருந்திப் போகிறது. என்னால் முடியாதுஇயலாதுசாத்தியமில்லைவாய்பே இல்லை என்பதை எந்த நிலையிலும் வெற்றியாளர்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை. மாறாக தாங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் முடியும்இயலும்சாத்தியம்வாய்ப்புண்டு என்று மாற்றி அமைக்கின்றனர்.

எந்த ஒன்றை ஆரம்பிக்கும் போதும் அதை முடியும் என்று சொல்பவர்களை விட முடியாது என்று சொல்லி எதிர்மறை எண்ணங்களை நமக்குள் கடத்த நினைப்பவர்களுக்கு பஞ்சவே இருப்பதில்லை. அதற்காக அவர்கள் உங்கள் முன் வைக்கும் காரணம் மிகச் சரியாகப் பொருந்துவதாய் தெரியும். விட்டு விடலாம் என்ற மனநிலையை உருவாக்கும். அதில் சிக்காமல் தப்புகிறவர்கள் அடுத்த அடியை எடுத்து வைக்கின்றனர். மாறாக, அதற்குள் அகப்பட்டுக் கொள்பவர்கள் தங்களின் இலக்கில் இருந்து பின் வாங்கி விடுகின்றனர். இது போதும் என நிறைவு கொள்கின்றனர். வெற்றியாளர்களாக மாற நினைப்பவர்கள் அப்படி நின்று விடுவதில்லை. அவர்கள் மற்றவர்களை விடத் தன்னை மட்டுமே முழுமையாக நம்புகிறார்கள். அதனால் ஒருவேளை தோல்வி ஏற்பட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். காரணம் சொல்பவர்கள் காரியங்களைச் செய்வதில்லை. காரியம் செய்ய முனைந்தவர்கள் காரணங்களுக்காகப் பின் வாங்குவதில்லை. அதற்காக தங்களின் நேரம் முழுமையையும் கொடுத்துப் பாடுபடுகின்றனர்.

நமக்கு மட்டுமல்ல இன்று உலகம் கொண்டாடும் எல்லா வெற்றியாளர்களுக்கும் இந்த நிலை இருந்திருக்கவே செய்கிறது. தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரம் மூலம் விளக்குகளை எரிய வைக்க முடியும் எனச் சொன்ன போது அவரைப் போல விஞ்ஞானிகளாய் இருந்தவர்கள் சொன்ன முதல் வார்த்தை சாத்தியமே இல்லை. முடியவே முடியாது என்பது தான்! அதற்கு அவர்கள் பட்டியலிட்டக் காரணங்களைப் பாருங்கள்.

  •  மின்சாரத்தை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக் கடத்த முடியாது.
  •  அப்படியே கடத்தினாலும் அதைப் பயன்படுத்தும் அளவைக் கணக்கிட முடியாது.
  • அப்படியே கணக்கிட்டாலும் மின்சாரப் பயன்பாட்டிற்கான செலவு அதிகம்.

மின்சாரம் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கும் ஒருவருக்கு இந்தக் காரணங்களைக் கேட்டால் அவர்கள் சொல்வது சரி என்பது போலவே தோன்றும். சராசரி மனநிலை கொண்டவர்களாக இருந்தால் அப்படியே ஏற்றுக் கொண்டு ஒரு வேலை சாத்தியமில்லையோ? என நினைத்துத் தன் முயற்சியில் இருந்து பின் வாங்கி இருப்பார்கள். ஆனால் எடிசன் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால்அப்படியேஎனச் சொல்லப்பட்ட அத்தனைத் தடைகளையும் தகர்க்கச் சாத்தியமிருக்கிறதா? என யோசித்தார். சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தன் குறிப்புகளோடு இராப்பகலாக ஆய்வுகளை மேற்கொண்டார். தன் முயற்சியில் ஜெயித்தார். தன் கண்டுபிடிப்புகளின் மூலமாக நியூயார்க் நகரை மின்சார விளக்குகளால் ஒளிர விட்டார். அப்போது எதிர்மறைக் கருத்துகளைச் சொன்னவர்களும், முடியாது என வாதிட்ட சக விஞ்ஞானிகளும் அசந்து போய் பாராட்டுவதற்காக அவரைத் தேடி வந்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் அளவுக்கு நாம் உழைக்க வேண்டியதில்லை. உங்களின் முயற்சியில் அதீத ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டு அதற்காகத் தீவிரமாக உழையுங்கள். அதனால் ஒரு வேளை தோல்வி அடைந்தாலும் அந்தத் தோல்வி கூட வெற்றியாகவே கருதப்படும் என்பதே அவரின் முயற்சி நமக்குச் சொல்லும் பாடம்.

முடியாது என்று முடிவு செய்வதை விட முயற்சித்துப் பார்ப்பது மேல் இல்லையா? ஒரு காலத்தில் விவசாயம் செய்ய வேண்டுமானால் நிலம் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தோம். நிலத்தைத் தவிர வேறு எங்கும் பயிரிடுதல் சாத்தியமில்லை என்பதே நம் மனநிலையாக இருந்தது. இந்த மனநிலையை உடைக்க எத்தனித்த முயற்சி வீட்டு மாடிகளிலும் தோட்டம் வளர்க்கும் சாத்தியத்தை உருவாக்கியது. அதன் தொடர் முயற்சி பலவிதமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. அப்பொழுதும் முடியாது - இயலாது என்று சொல்லிக் கொள்ளும் மனநிலையில் இருந்தவர்கள் மொட்டை மாடியில் அதிகத் தொட்டிகளை ஏற்றினால் கட்டிடத்திற்குப் பாதிப்பு வரும் என்றனர். மாடித் தோட்டங்கள் அத்தனை சாத்தியமில்லை எனச் சும்மா இருந்தனர். அவர்கள் சொல்வதும் ஒரு வகையில் சரி தானே என்ற நினைப்பு தொட்டிக்குப் பதிலாக சாக்குப்பை, எடை குறைந்த பிளாஸ்டிக் வாளிகளில் வளர்க்கலாம் என்ற ஒரு தீர்வைக் கொண்டு வந்தது. அப்போதும் கூட அவர்கள் முடியாது என்று சொல்லிக் கொண்டிருப்பதை விடவில்லை.

செடிகள் வளர்ப்பிற்கு மண்ணைப் பயன்படுத்துவதால் அப்படிச் செய்தாலும் எடை குறைவதெற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று வாதிட்டனர், அதற்கும் ஒரு தீர்வு இருக்கும் என்ற எண்ணம் தந்த தேடல்கள் மண்ணுக்கு மாற்றாக தேங்காய் நார்களைப் பயன்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டு வந்தது. இன்று எல்லா வீடுகளிலும் மொட்டை மாடிக் காய்கறித் தோட்டங்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. கட்டிடங்களைக் கட்டி விற்கும் நிறுவனங்கள் கூட சிறப்புச் சலுகையாக மொட்டை மாடித் தோட்டங்களையும், வீட்டுத் தோட்டங்களையும் அமைத்துச் சில மாதங்களுக்குப் பராமரிப்பும் செய்து தருகின்றன. வீட்டு மாடியில் ஒரு காய்கறித் தோட்டம் அமைக்க முடியும் என்று சொன்னதற்கே இத்தனை எதிர்மறைக் கருத்துகளைத் தாண்ட வேண்டி இருக்கிறதென்றால்  மின்சாரத்தைக் கண்டறிந்து உலகம் முழுக்கத் தர நினைத்த எடிசன் எத்தனை எதிர்மறைக் கருத்துகளைத் தாண்டி வந்திருக்க வேண்டியிருந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து மட்டுமல்ல உங்களுக்குள் இருந்தும் வரும் எதிர்மறைக் கருத்துகளைத் தாண்டினால் மட்டுமே உங்களால் உங்கள் இலக்கைச் சென்றடைய முடியும்.

அதேநேரம், இலக்கு நோக்கிய முயற்சிகளில் உங்களின் பலம், பலவீனங்களையும் மனதில் கொள்ள வேண்டும். வீம்புக்காக எதையும் செய்து பார்க்கும்  முயற்சிகள் எந்த பலனையும் தராது. மாறாக அதனால் காலவிரயமே ஏற்படும். அதன் வெளிப்பாடு முடிவுகள் நினைத்த படி இல்லாது போகும் போது ஒருவித விரக்தி மனப்பான்மை ஏற்பட்டுத் தொடர் இயக்கம் தடைபட்டுப் போகும். உங்களுக்குள் உருவாகும் இந்த எண்ணம் வெளியில் இருந்து நீங்கள் பெறும் எதிர்மறை எண்னங்களை விடவும் அதிக ஆபத்தானவை. எனவே மிகச்ச் சரியான வழிமுறைகளில் உஙகள் இலக்கை முடியாது என்ற நிலையில் இருந்து முடியும் என்ற நிலைக்கு மாற்றுங்கள். அது உங்களையும் ஒரு வெற்றியாளராக மாற்றும்.

நன்றி : அச்சாரம் மாத இதழ்

1 comment:

  1. மின்சாரத்தை உதாரணம் கூறிய விதம் அருமை.

    ReplyDelete