Tuesday 20 February 2018

தனுஷ்கோடி நாயகனைத் தலைவணங்கிப் பணிவோம்!

 

பாம்பனுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள தனுஷ்கோடிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். வாங்காள விரிகுடா கடலாகிய மகோநதியும், இந்துமகா சமுத்திரமாகிய இரத்தினாகரமும் கூடும் இடமே (சாகரசங்கமம்) “தனுஷ்கோடிஎன்றழைக்கப்படுகிறது.

கங்கை கரையில் உயிர்விடுவது

நர்மதை கரையில் நோன்பிருப்பது

குருசேத்திரத்தில் அன்பளிப்பு செய்வது இம்மூன்றும் புண்ணிய செயலாகும். இம்மூன்றையும் ஒருங்கே செய்து பேறு பெறக்கூடிய இடம் தனுஷ்கோடிஎன இத்தலச் சிறப்பை தலமகாத்மியம் கூறுகிறது.

இராமேஸ்வரம் தீவு வில்வடிவில் அமைந்திருப்பதால் அது இராமருடைய வில் என அழைக்கப்பட்டது. வில்லைக் குறிக்கும் வடமொழிச் சொல்லான தனுஷ்உடன் இராமேஸ்வரத்தின் முனையைக் குறிக்கும் கோடிஎன்ற சொல்லும் இணைந்து தனுஷ்கோடிஎன பெயர் பெற்றது என்றும் -

சேதுபாலம் வழியாக மற்றவர்கள் படையெடுத்து வந்து விடக்கூடாதே  என நினைத்த விபீஷணன் பாலத்தைக் கட்டிய இராமரிடமே உடைத்து விடும் படி கேட்டுக் கொண்டான். இராமரும் வில்லின் முனையால் பாலத்தை உடைத்தெறிந்தார். அதன் காரணமாக தனுஷ்கோடி” (தனுஷ் வில்; கோடி முனை) என பெயர் பெற்றது என்றும்

இராமர் இலங்கை செல்ல கடலைக் கடப்பதற்கு வழி ஏற்படுத்தி தரும்படி வருணனை நோக்கி தவமிருந்தும் அவன் வரவில்லை. இதனால் கோபம் கொண்ட இராமர் தன் வில்லை வளைத்து கடலை வற்றச் செய்வதற்காக சுடுசரம் துறந்த இடம் என்பதால் தனுஷ்கோடிஎன பெயர் பெற்றது என்றும் பலவிதமான பெயர் காரணங்கள் கூறப்படுகிறது. தன்னை நாடி வந்த விபிஷணனுக்கு இராமர் கோதண்டத்தை ஏந்திய படி இங்கு தான் அடைக்கலம் கொடுத்தார். கோதண்டத்தை ஏந்திய இராமர் பெயரில் உருவானஸ்ரீ கோதண்ட ராமசாமி கோவில்தனுஷ்கோடியின் வடகடல் கரையில் அமைந்துள்ளது. 

வங்காளத்துப் பாங்கூர் கட்டிக்கொடுத்த இக்கோவில் பன்னிரெண்டு படிகள் உயரப்படுத்திய மேடையில் அமைந்துள்ளது. உள்தாழ்வாரச் சுற்றும், வெளி தாழ்வாரச் சுற்றுமாக வடக்கு நோக்கி இருக்கும் இக்கோவிலின் கருவறையின் நடுவில் கோதண்டராமரும் அவருக்கு வலமாக சீதையும், இடமாக இலட்சுமணரும் வீற்றிருக்கின்றனர். வடக்கு முகமாக நிற்கும் இவர்களுக்கு எதிரில் கிழக்கு முகமாக நின்று அனுமனும், விபீஷணனும் வணங்கிய படி உள்ளனர்

உப்பங்கழிகளால் சூழப்பட்டு சேறும், சகதியுமாக இருந்த இக்கோவில் தனியார் அறக்கட்டளையினரால் திருப்பணி செய்யப்பட்டு தற்போது புதிய பொலிவுடன் காட்சி தருகிறது. கோதண்டராமரை வழிபட்ட பின் அங்கு இருக்கும்சேது தீர்த்தத்தில்நீராட வேண்டும். இராவண வதத்தை முடித்து விட்டு திரும்பிய இராமர் இத்தீர்த்தத்தில் தான் முதலில் நீராடினார்

கொடுத்த வாக்கை மீறியதால் சாபம் பெற்று பித்து பிடித்த தர்மகுப்தன் ஜைமினி என்ற முனிவரின் சொல்படி இச்சேது தீர்த்தத்தத்தில் நீராடி சித்த பிரமை நீங்கினான் என்று புராண கதைகளிலும்

பாவங்களிலேயே பெரிய பாவமாக கருதப்படும் கருவிலிருக்கும் குழந்தையை அழிக்க முயல்வது, உறங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்வது ஆகிய பாவங்களைச் செய்த அசுவத்தாமன் இச்சேது தீர்த்தத்தில் நீராடி தன் பாவத்தை போக்கிக் கொண்டான் என்று இதிகாசங்களிலும் – 

காசியிலும், சிதம்பரத்திலும் பத்து மாதம் தங்கிய பலனையும், நைமி சாரண்யம், திருப்பதி, ஸ்ரீபர்வதம், மதுரை, திருவரங்கம், திருவனைக்கால், கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், திருவெண்காடு, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்களத்தி ஆகிய இயங்களில் ஒரு வருடம் தங்கிய பலனை தனுஷ்கோடியில் உள்ள இத்தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வணங்கி மூன்றே நாளில் பெறலாம் என்றும் இச்சேது தீர்த்தத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது

தீர்த்தங்களில் நீராடுவதற்கென நியதிகள் சேதுதீர்த்தத்தில் நீராடுவதற்கு கிடையாது. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இத்தீர்த்தத்தில் நீராடலாம் என சேதுமகாத்மியம் கூறுகிறது. தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் காரணமாக இத்தீர்த்தம் கடலால் சூழப்பட்டு விட்டது.. பாவங்கள் போகவும், பரிகாரங்கள் வேண்டியும் பயணம் மேற்கொண்டுள்ள நாமும் கோதண்டராமரை வழிபட்ட பின் சேது தீர்த்தத்தில் விழுந்து எழ வேண்டும். சேதுதீர்த்தத்தில் நீராடிய பின் செல்ல வேண்டிய தலம் இராமேஸ்வரம்”.

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்








No comments:

Post a Comment